செய்திகள்

கஜா புயலின் கண் பகுதி முழுமையாக கரையை கடந்துவிட்டது - வானிலை ஆய்வு மையம்

Published On 2018-11-15 20:59 GMT   |   Update On 2018-11-15 20:59 GMT
கஜா புயலின் கண்பகுதி முழுமையாக கரையை கடந்து விட்டதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. #GajaStorm
சென்னை:

கஜா புயலின் கண்பகுதி முழுமையாக கரையை கடந்து விட்டதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.  

கஜா புயலின் கண்பகுதி கரையை கடந்தவுடன் எதிர் திசையில் இருந்து பலத்த காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.  புயல் முழுமையாக கரையை கடக்க இன்னும் 2 மணி நேரமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  புயலின் கண்பகுதி கரையை கடந்தாலும் நாகையில் காற்றின் வேகம் குறையாது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கஜா புயலின் கண்பகுதி கரையை கடக்க தொடங்கியதால் நாகை, வேதாரண்யத்தில் 110 கிமீ வேகத்தில் காற்றி வீசி வருகிறது.  இதன் காரணமாக நாகை வேதாரண்யத்தில் புயல் காற்று வீசியதால் பல வீடுகளின் மேற்கூரைகள் சேதம் அடைந்து காணப்படுகிறது.   நாகை வேதாரண்யத்தில் புயல் காற்று வீசி வருவதால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

புயல் காரணமாக பல்வேறு இடங்களில் தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மீட்பு பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனினும் மீட்பு பணியினர் இரவோடு இரவாக பல இடங்களில் மரங்களை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனிடையே புயல் கரையை கடந்தவுடன் உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கும் என நாகை ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். கஜா புயல் முன்னெச்சரிக்கையாக நாகை மாவட்டத்தில் 26 கிராமங்களில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.  தஞ்சை, கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

மேலும் தற்போது காரைக்கால் பகுதி பெரிதும் பாதிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அரசின் அறிவிப்பு வரும் வரை மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்கியல் இருக்குமாறும், வெளியே வரவேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புயலின் தாக்கத்தால் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.  நாகையில் உள்ளிட்ட பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது.   #GajaStorm
Tags:    

Similar News