செய்திகள்

கமல்ஹாசனின் புதிய படம்: சினிமா படங்களுக்கு ஜாதி பெயர் வைக்கக்கூடாது- திருமாவளவன் எதிர்ப்பு

Published On 2018-11-08 07:43 GMT   |   Update On 2018-11-08 07:51 GMT
ஜாதிகளின் பெயரில் திரைப்படம் எடுக்கக்கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். #Thirumavalavan #Kamalhassan
சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மாலை மலருக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி:- அன்மையில் ஆந்திர முதல்-மந்திரி சந்திர பாபு நாயுடுவை திடீரென சந்தித்ததின் நோக்கம் என்ன?

பதில்:- எங்கள் கட்சி சார்பில் டிசம்பர் 10-ந்தேதி திருச்சியில் ஜனாதன பயங்கரவாதத்தை எதிர்த்து தேசம் காப்போம் மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற சந்திரபாபு நாயுடுவை சந்தித்து அழைப்பு விடுத்தோம்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சீத்தாராம் யெச்சூரி, சுதாகர் ரெட்டி ஆகியோரையும் இந்த மாநாட்டில் பங்கேற்க அழைத்துள்ளோம். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழ்நாட்டை சேர்ந்த தோழமை கட்சிகளின் தலைவர்களையும் அழைத்துள்ளோம்.

சந்திரபாபு நாயுடு ஒரு சில நாட்களில் தான் பங்கேற்பது தொடர்பாக தகவல் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

கே:- வேறு ஏதேனும் அவருடன் அரசியல் தொடர்பாக பேசினீர்களா?

ப:- தேசிய ஜனநாயக முன்னணியில் இருந்து சந்திரபாபு நாயுடு வெளியேறியதை வரவேற்றதோடு அன்மையில் ராகுல்காந்தியை சந்தித்ததையும் பாராட்டினோம். அகில இந்திய அளவில் மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைவது ஜனாதன சக்தியிடம் இருந்து தேசத்தை பாதுகாப்பதும் அவசியமானது என கூறினோம். ராகுல்காந்தியை சந்தித்த போது இந்த தேசத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று தாங்கள் கூறியது எங்கள் மாநாட்டின் நோக்கத்தை பிரதிபலிப்பதாக இருந்தது என்று கூறினோம்.

தமிழ்நாட்டில் தி.மு.க. காங்கிரஸ், இடதுசாரிகள், ம.தி.மு.க. இஸ்லாமிய கட்சிகள் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுகிறோம் என்பதையும் தெரிவித்தோம். அவர் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

கே:- தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தை இடம் பெறுவதில் சிக்கல் இருக்கிறதா?

ப:- ஒரு சில ஊடகங்கள் அவ்வாறு வதந்திகளை பரப்பி வருகின்றன. தி.மு.க.வுடன் எங்களுக்கு நல்ல இணக்கமான உறவு உள்ளது. ஜனாதன சக்திகளை எதிர்த்து அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் நாங்கள் தொடர்ந்து ஈடுபடுவதால் எங்களுக்கு எதிராக சிலர் இப்படி திட்டமிட்டு வதந்தியை பரப்புகிறார்கள்.

கே:- கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினீர்களா?

ப:- நேற்று மாலை அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன்.

கே:- கமல்ஹாசன் தேவர் மகன்-2 படம் எடுக்கப் போவதாக கூறியுள்ளாரே?

ப:- ஜாதிகளின் பெயரில் திரைப்படம் எடுப்பது நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. தேவர் மகன், சின்னக் கவுண்டர், கவுண்டர் பொண்ணா கொக்கா இது போன்ற படங்கள் ஏற்கனவே வெளி வந்துள்ளன. தலைப்புகளில் மட்டுமின்றி கதைகளிலும் ஜாதிகளை மையமாக வைத்து படங்கள் வெளி வந்திருக்கின்றன. இதனால் ஜாதி பிரச்சினைகள் அவ்வப்போது தலைதூக்கி உள்ளன. நடிகர்களும் ஜாதி அடிப்படையில் அடையாளப்படுத்தப்படுவது, ஜாதி அடிப்படையில் ரசிகர் மன்றங்களை அமைப்பது மேலோங்கி உள்ளன.



இந்த நிலை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கிடையாது. ஜாதி பிரச்சினைகள், அதனால் உருவாகும் பாதிப்புகள் தொடர்பாக திரைப்படங்களில் மட்டுமின்றி இலக்கிய தளம் உள்ளிட்ட பிற தளங்களிலும் விவாதிக்கப்பட வேண்டும் என்பது வரவேற்க கூடியதாகும்.

ஆனால் வியாபார நோக்கத்தோடும் அரசியல் ஆதாயத்தோடும் கலை இலக்கிய துறைகளில் செயல்படுவது, திரைப்படங்கள் தயாரிப்பது சமூக நல்லிணக்கத்திற்கு உகந்தது அல்ல.

உழைக்கிற மக்கள் மோதிக்கொள்ளட்டும் தங்களுக்கு ஆதாயம் கிடைத்தால் போதும் என்று நினைப்பது சமூக விரோத போக்காகும். எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது தெருக்களுக்கும், கடைகளுக்கும் கூட ஜாதி பெயரை சூட்டக்கூடாது என்று அரசாணை பிறப்பித்தார். அவர் வழியில் இன்று ஆட்சி நடத்தக்கூடியவர்கள் திரைப்படங்களுக்கு ஜாதி பெயர் சூட்டுவதை வேடிக்கை பார்க்ககூடாது.

எம்.ஜி.ஆரின் அந்த அரசாணையை தற்போதைய அ.தி.மு.க. அரசு நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும். இல்லையென்றால் இதை வைத்து ஜாதியவாதிகள் அப்பாவி மக்கள் இடையே மோதலை தூண்டி விடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #Thirumavalavan #Kamalhassan
Tags:    

Similar News