செய்திகள்

மதுரையில் மேலும் 4 பேருக்கு பன்றி காய்ச்சல்

Published On 2018-10-23 16:36 GMT   |   Update On 2018-10-23 16:36 GMT
மதுரையில் பன்றி காய்ச்சலுக்கு 2 பேர் இறந்த நிலையில், மேலும் 4 பேருக்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
மதுரை:

மதுரையில் பன்றி காய்ச்சல் நோய்க்கு, பைக்காரா பகுதியை சேர்ந்த மீனாட்சி, அனுப்பானடியை சேர்ந்த வீரம்மாள் ஆகியோர் பலியாகினர். இந்தநிலையில் பன்றி காய்ச்சல் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கை குறித்து மதுரை பெரிய ஆஸ்பத்திரியின் மருத்துவ கண்காணிப்பாளர் சண்முக சுந்தரம் கூறியதாவது:-

மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட எல்லா காய்ச்சலுக்கு தேவையான மருந்துகளும் தயார் நிலையில் இருக்கிறது. காய்ச்சல் அறிகுறியுடன் வரும் அனைவருக்கும் அனைத்து விதமான பரிசோதனைகளும் செய்யப்படுகிறது. காய்ச்சல் அறிகுறி இருந்தால் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளை அணுகவும். பைக்காராவை சேர்ந்த மீனாட்சி என்பவர் பன்றி காய்ச்சலால் இறந்து போனார். அவர் இறந்ததற்கு காரணம், காலம் கடந்து சிகிச்சைக்கு வந்தது தான். அவர் தொடக்கத்திலேயே சிகிச்சைக்கு வந்திருந்தால் அவரை குணப்படுத்தியிருக்கலாம்.

மதுரையில் காய்ச்சல் பாதிப்புடன் 51 பெரியவர்கள், 23 குழந்தைகள், 24 கர்ப்பிணிகள் என மொத்தம் 99 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதுபோல் டெங்கு காய்ச்சலுக்கு 6 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணம்மாள்(வயது 65), மதுரை குலமங்கலம் பகுதியை சேர்ந்த சுசீலா(55), மதுரை அழகாபுரியை சேர்ந்த ராம்ராஜ்(52), திண்டுக்கல் நத்தம் பகுதியை சேர்ந்த பொன்னம்மாள்(19) ஆகிய 4 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருக்கும் தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களை கவனிக்க டாக்டர்கள் குழுவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். உடன் மருந்தியல் துறை பேராசிரியர் பாலாஜிநாதன் மற்றும் டாக்டர்கள் இருந்தனர். 
Tags:    

Similar News