செய்திகள்

சூலூர் பகுதியில் மின் கட்டணத்திற்கு 65 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு - பொதுமக்கள் எதிர்ப்பு

Published On 2018-09-27 11:45 GMT   |   Update On 2018-09-27 11:45 GMT
சூலூர் பகுதியில் உள்ள வீட்டு உபயோக மின்சார பயன்பாட்டாளர்களிடம் 65 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி வசூல் செய்து வருவதற்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சூலூர்:

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் பொது மக்களின் வீட்டு உபயோக மின்சார பயன்பாட்டிற்கான கட்டணத்திற்கு 65 சதவீத சேவை வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.

பாப்பம்பட்டி பகுதியில் உள்ள பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்த சென்ற போது 95 ரூபாய் மின் கட்டணத்திற்கு மத்திய அரசின் பொருட்கள் மற்றும் சேவை வரியாக 31.50 ரூபாயும்,மாநில அரசின் பொருட்கள் மற்றும் சேவை வரியாக 31.50 ரூபாய் என 158 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து மின்வாரிய அலுவலர்களிடம் கேட்டபோது, இது அதிகாரிகளின் உத்தரவு கம்பயூட்டரில் வந்த பதிவுப்படி தான் வசூலிக்கிறோம் என கூறினர்.

100 யூனிட் வரை பயன்படுத்தும் பயனாளிகளுக்கு அரசு இலவச மின்சாரம் வழங்கும் போது அதற்கு 9 ரூபாய் வரி வசூலிப்பதாக பாதிக்கப்பட்ட ஆறுமுகம் குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் கூறுகையில் இந்த மாதிரியான வரி எங்கும் இல்லை. தமிழ்நாட்டில் மட்டும் உள்ளது. இலவசத்திற்கும் வரிவிதிப்பது இங்குதான் .இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக பொதுமக்களுக்கு நல்ல தீர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறினார்.
Tags:    

Similar News