இந்தியா

குஜராத்திலும் முஸ்லிம்களுக்கு ஓபிசி இடஒதுக்கீடு உள்ளது: மோடிக்கு தேஜஸ்வி கடிதம்

Published On 2024-05-27 11:30 GMT   |   Update On 2024-05-27 11:30 GMT
  • குஜராத் மாநிலத்தில், ஓபிசி இடஒதுக்கீடு பெறும் இஸ்லாமிய சமூகத்தினரின் பட்டியல் இது.
  • தேர்தல் தோல்விக்கு பயந்து, இப்போது என்னை சிறைக்கு அனுப்பப் போவதாக பிரதமர் வெளிப்படையாக மிரட்டுகிறார்.

எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டை இந்தியா கூட்டணி முஸ்லிம்களுக்கு கொடுத்துவிடும் என்று பிரதமர் மோடி பேசிவரும் நிலையில், குஜராத் அரசும் முஸ்லிம்களுக்கு ஓபிசி இடஒதுக்கீடு கொடுத்து வருகிறது ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடிக்கு இரண்டு பக்க கடிதம் ஒன்றை தேஜஸ்வி யாதவ் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் குஜராத்தில் ஓபிசி முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு பட்டியலை இணைந்துள்ளார்.

அக்கடிதத்தில், "குஜராத் மாநிலத்தில், ஓபிசி இடஒதுக்கீடு பெறும் இஸ்லாமிய சமூகத்தினரின் பட்டியல் இது. இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள தகவல், குஜராத்தில் 13 ஆண்டுகள் முதல்வராக இருந்து, தற்போது பிரதமராக இருக்கும் மோடிக்கு தெரியாதா?

தனியார் துறையில் இடஒதுக்கீடு விவகாரத்தையும் பிரதமர் புறக்கணித்துள்ளார். பீகாரில் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் படி இடஒதுக்கீட்டை அதிகரிக்க பலமுறை கோரிக்கை வைத்தும் பிரதமர் அதனை நிராகரித்தார்.

அரசியலமைப்பின் 15 மற்றும் 16 வது பிரிவின் கீழ் அரசு வேலைகளில் மட்டுமே இடஒதுக்கீடு கிடைக்கும், ஆனால் பாஜக அரசு ரயில்வே, ராணுவம் மற்றும் பிற அரசு துறைகளில் இருந்து அரசு வேலைகளை நீக்கியதன் மூலம் இடஒதுக்கீடு மறைமுகமாக ரத்து செய்யப்பட்டு வருகிறது.

எருமைமாட்டை பறித்து விடுவார்கள், தாலியை பறித்துவிடுவார்கள் என்று பேசிய மோடி இப்போது முஜ்ரா நடனத்தை பற்றி பேசுகிறார். இந்த நாட்டின் பிரதமரின் மொழி இப்படித்தான் இருக்க வேண்டுமா? நீங்கள் யோசித்து முடிவு செய்யுங்கள்.

தேர்தல் தோல்விக்கு பயந்து, இப்போது என்னை சிறைக்கு அனுப்பப் போவதாக பிரதமர் பேசுகிறார். மத்திய விசாரணை அமைப்புகள் மோடியின் விருப்பப்படி செயல்படுகின்றன என்பதற்கு உங்களது பேச்சே ஆதாரமாகும்" என்று எழுதியுள்ளார்.

Tags:    

Similar News