உடற்பயிற்சி கூடத்துக்கு வந்த 2 இளம்பெண்கள் பாலியல் துன்புறுத்தல் - பயிற்சியாளர் அதிரடி கைது
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சேர்பு பகுதியை சேர்ந்தவர் அஜ்மல். இவர் குர்காஞ்சேரி பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். அப்போது அவருக்கு அந்த பயற்சி கூடத்துக்கு வந்த 2 இளம்பெண்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இரு பெண்களிடமும் ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவரிடம் பேசி பழகி வந்திருக்கிறார்.
மேலும் இருவரையும் காதலிப்பதாக கூறியுள்ளார். அதனை உண்மை என்று நம்பிய அந்த இளம்பெண்கள், அஜ்மலுடன் நெருங்கி பழகியிருக்கின்றனர். அதனை பயன்படுத்தி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இருவரிடமும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இந்த விவகாரம் வெகு நாட்களுக்கு பிறகு இரு பெண்களுக்கும் தெரிந்துள்ளது.
ஆகவே அவர்கள், அதுபற்றி சேர்பு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். திருமண வாக்குறுதி அளித்து தங்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக இரு பெண்களும் தங்களின் புகாரில் கூறியிருக்கின்றனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து அஜ்மலை கைது செய்தனர்.
இவர், இதேபோன்று உடற்பயிற்சி கூடத்துக்கு வந்த பல பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் வேறு எந்த பெண்களும் அஜ்மல் மீது புகார் கொடுக்க வில்லை என்பதால் 2 இளம்பெண்கள் புகாரின் அடிப்படையில் மட்டும் வழக்கு பதியப்பட்டுள்ளது.