இந்தியா

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா- பக்தர்களிடம் நகை பறிப்பில் ஈடுபட முயன்ற தமிழக பெண்கள் 4 பேர் கைது

Published On 2026-03-05 11:13 IST   |   Update On 2026-03-05 11:13:00 IST
  • திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
  • குற்ற சம்பவங்கள் மற்றும் வேறு அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்க 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

திருவனந்தபுரம்:

'பெண்களின் சபரிமலை' என்று அழைக்கப்படும் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பொங்கல் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த விழாவில் லட்சக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு பொங்கலிட்டு வழிபாடு நடத்துவார்கள்.

இந்த ஆண்டுக்கான பொங்கல் வழிபாடு நேற்று முன்தினம் (3-ந்தேதி) நடைபெற்றது. இதில் பல லட்சம் பெண்கள் கலந்துகொண்டு பொங்கலிட்டனர். லட்சக்கணக்கானோர் திரள்வதால் திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் மற்றும் வேறு அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்க 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்தநிலையில் பொங்கல் விழாவில் பங்கேற்ற பெண் பக்தர்களிடம் திருட்டில் ஈடுபடுவதற்காக வந்த தமிழக பெண்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அது பற்றிய விவரம் வருமாறு:-

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவில் கலந்துகொண்ட கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண், மாநில அரசு போக்குவரத்து கழக பேருந்து நிலையத்தில் சிற்றுண்டி வாங்குவதற்காக வரிசையில் நின்றார். அப்போது அவர் அணிந்திருந்த தங்க செயினை, அவருக்கு பின்னால் வரிசையில் நின்ற ஒரு பெண் நைசாக பறித்தார்.

அப்போது சிற்றுண்டி வாங்க நின்று கொண்டிருந்த பெண் உஷாரானார். அவர் தன்னிடம் செயின் பறிக்க முயன்ற பெண்ணை அந்த பகுதியில் நின்றவர்களின் உதவியுடன் கையும் களவுமாக பிடித்தார். பின்பு செயின் பறிப்பில் ஈடுபட முயன்ற பெண், போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

அவரிடம் விசாரித்த போது அவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதும், அவருடன் மேலும் 3 பேர் வந்திருப்பதும் தெரிய வந்தது. அவர்கள் 4 பேரும் பொங்கல் திருவிழாவில் பங்கேற்க வந்திருக்கும் பக்தர்களை குறிவைத்து நகை பறிப்பில் ஈடுபட வந்திருப்பது விசாரணையில் வெளியானது.

இதையடுத்து தமிழகத்தை சேர்ந்த பெண்களான மீனா (வயது55), ரோஸ்லி(40), சாந்தி(37), மீனாட்சி(49) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். ஒரு பெண்ணிடம் நகைபறிப்பில் ஈடுபட்டபோது ஒருவர் சிக்கியதால், மற்ற 3 பேரும் வேறு எந்த பெண்களிடமும் கைவரிசை காட்டாமல் சென்றுவிட்டனர்.

ஆனால் சிக்கிய பெண் அனைத்தையும் கூறி விட்டதால் 4 பேரும் சிக்கிக் கொண்டனர். இவர்களுக்கு கேரள மாநிலத்தில் நடந்த திருட்டு சம்பவங்கள் எதிலும் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News