செய்திகள்

வரும் தேர்தல்களில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியே அமோக வெற்றி பெறும்- வைகோ

Published On 2018-08-28 11:12 GMT   |   Update On 2018-08-28 11:12 GMT
தமிழகத்தில் தேர்தல் எப்போது வந்தாலும் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
தென்காசி:

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தென்காசியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கேரள மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை கொண்டு சென்ற நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை தடுத்து நிறுத்தியதும். அப்போது அவரை நடத்திய விதமும் முறையற்ற செயல். தமிழகத்தின் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் கட்டுப்பாட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறையில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக தி.மு.க. சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கினை விசாரணை செய்த சென்னை உயர்நீதி மன்றம் வருகிற 4-ந் தேதிக்குள் அ.தி.மு.க. அரசு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வருகின்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் ம.தி.மு.க. திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும். தமிழகத்தில் தி.மு.க கூட்டணி தான் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினை தி.மு.க. தலைவராக அடிமட்ட தொண்டன் முதல் தலைமை கழக நிர்வாகிகள் வரை அனைவரும் ஒருமித்த கருத்தோடு ஏகமனதாக தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

தி.மு.க.வை மு.க.ஸ்டாலின் சிறப்பாக வழிநடத்துவார். தமிழகத்தில் தேர்தல் எப்போது வந்தாலும் தி.மு.க. கூட்டணியே அமோக வெற்றி பெறும். தி.மு.க.வின் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்பார். தமிழக மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி சாதனைகளை செய்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News