செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சரத்குமார் உண்ணாவிரதம்

Published On 2018-04-24 22:57 GMT   |   Update On 2018-04-24 22:57 GMT
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சென்னையில் இன்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் உண்ணாவிரதம் இருப்பதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் தலைமையில் 25-4-2018 அன்று (இன்று) சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் காலை 8 மணி முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே தீர வேண்டும் என்ற தமிழரின் உரிமையை பெற்றிட அனைவரும் ஒன்றிணைந்து தொடர்ந்து போராட வேண்டும். விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்ற அறவழியில் நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டம் வெற்றிபெறுவதற்கு, தமிழக விவசாயிகள் வாழ்வு மலர, தமிழ் உணர்வுள்ள தலைவர்களும், தன்னார்வலர்களும், கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் பெருமளவில் வருகை தர உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அது தொடர்பாக, தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருப்பதை வரவேற்பதுடன், இந்த உண்ணாவிரதம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார். 
Tags:    

Similar News