செய்திகள்

மெரினா கடற்கரையில் கடைசியாக போராட்டம் நடத்த அனுமதித்தது எப்போது?- போலீஸ் கமிஷனருக்கு, ஐகோர்ட்டு கேள்வி

Published On 2018-04-20 20:00 GMT   |   Update On 2018-04-20 20:00 GMT
மெரினா கடற்கரையில் கடைசியாக போராட்டம் நடத்துவதற்கு அனுமதியளித்தது எப்போது? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.
சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மெரினாவில் 90 நாட்களுக்கு தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதியளிக்கக்கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி டி.ராஜா விசாரித்து வருகிறார். இந்த வழக்கு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தபோது, போலீஸ் கமிஷனர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மெரினா கடற் கரையில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி கிடையாது என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் பங்கேற்ற உண்ணாவிரதப் போராட்டம் கூட சேப்பாக்கத்தில் தான் நடந்தது. மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதியளிக்க முடியாது’ என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி, ‘மெரினா கடற்கரையில் கடைசியாக போராட்டம் நடத்துவதற்கு அனுமதியளித்தது எப்போது? என்பது குறித்த விவரமான அறிக்கையை போலீஸ் கமிஷனர் வருகிற 24-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.  #tamilnews
Tags:    

Similar News