செய்திகள்

குன்னூர் -கோத்தகிரியில் இடியுடன் பலத்த மழை டி.வி. பெட்டிகள் சேதம்

Published On 2018-04-13 12:59 GMT   |   Update On 2018-04-13 12:59 GMT
குன்னூர் மற்றும் கோத்தகிரியில் இடியுடன் பலத்த மழை பெய்ததால் வீடுகளில் இருந்த டி.வி.க்கள் சேதம் அடைந்தன.

கோத்தகிரி:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நேற்று முன்தினம் இரவு ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று இரவும் மீண்டும் பலத்த மழை கொட்டி தீர்த்தது. நேற்று இரவு 9 மணி முதல் இன்று அதிகாலை 4 மணி வரை இடி , மின்னலுடன் மழை பெய்தது. 

கோத்தகிரி மட்டுமின்றி அதன் சுற்றுப்புற பகுதிகளான கொத்த கொம்பை, அளக்கரை, அரவேணு, சூலூர் மட்டம் ஆகிய பகுதிகளிலும் மழை நீடித்தது. இதனால் ரோடுகளில் வெள்ளம் போல் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.கோத்தகிரியில் 82 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

குன்னூரிலும் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை சூறாவளி காற்று , இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் டெலிபோன் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.

பலத்த இடி காரணமாக வீடுகளில் இருந்த டி.வி.க்கள் சேதம் அடைந்தது. ரோடுகளில் காட்டாற்று வெள்ளம் போல் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ரோடுகள் மணல், கற்களாகவும், சேறும், சகதியுமாக காணப்பட்டது.

ஊட்டியில் கடந்த 5 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இந்த மழை ஊட்டி மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டு உள்ள மலர் செடிகளுக்கு பயனுள்ளதாக இருந்து வருகிறது. தொட்டிகளில் வைக்கப்பட்டு உள்ள மலர் செடிகள் நன்கு வளர்ந்து கண்களுக்கு விருந்தளித்து வருகிறது.

Tags:    

Similar News