உள்ளூர் செய்திகள்

போலி வாக்காளர் அட்டை தயாரித்து ரூ.50 லட்சம் மதிப்பிலான நிலம் மோசடி

Published On 2024-05-05 06:22 GMT   |   Update On 2024-05-05 06:22 GMT
  • கலியமூர்த்தி, திருசங்குவிடம் சென்று இது குறித்து கேட்டுள்ளார்.
  • போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மேல்குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 59). இவருக்கு ரூ.50லட்சம் மதிப்பிலான 38 சென்ட் நிலம் பண்ருட்டி அருகே உள்ள மனம்தவிழ்ந்த புத்தூர் கிராமத்தில் உள்ளது.

இந்த நிலையில் கலியமூர்த்திக்கு சொந்தமான 38 சென்ட் நிலம், அதே ஊரைச் சேர்ந்த இவரது உறவினர் திருசங்குவின் பெயரில் மாறியதாக தகவல் வந்தது. இதையடுத்து கலியமூர்த்தி, தனது வீட்டில் இருந்து நிலப் பத்திரத்தை தேடிய போது அதனை காணவில்லை. மேலும், வாக்காளர் அடையாள அட்டையையும் காணவில்லை.

இதனைத் தொடர்ந்து கலியமூர்த்தி, திருசங்குவிடம் சென்று இது குறித்து கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திருசங்கு, கலியமூர்த்தியை அசிங்கமாக திட்டி விரட்டியடித்துள்ளார். அக்கம் பக்கத்தினர், கலியமூர்த்தியை மீட்டு அங்கிருந்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த கலியமூர்த்தி, இது குறித்து கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் புகாரளித்தார்.

விசாரணையில், கலியமூர்த்திக்கு சொந்தமான நிலத்தின் பத்திரத்தையும், வாக்காளர் அடையாள அட்டையையும், திருசங்கு திருடியது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் கலியமூர்த்தியின் வாக்காளர் அடையாள அட்டையில் இருந்த அவரது போட்டோவுக்கு பதிலாக, பொண்ணாங்குப்பத்தை சேர்ந்த மூர்த்தியின் போட்டோவை வைத்து போலியாக வாக்காளர் அடையாள அட்டையை திருசங்கு தயார் செய்துள்ளார்.

போலியாக தயாரிக்கப்பட்ட ஆதாரத்தை வைத்து கலியமூர்த்திக்கு சொந்தமான நிலத்தை மூர்த்தியை வைத்து புதுப்பேட்டை பத்திரபதிவு அலுவலகத்தில் திருசங்கு கிரயம் பெற்றதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து திருசங்கு, அவருக்கு உடந்தையாக இருந்த மூர்த்தி, திருநாவுக்கரசு ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், புதுப்பேட்டை பத்திர பதிவு அலுவலர் பாலாஜி, பத்திர எழுத்தர் சீனிவாசன் ஆகியோர் மீதும் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் புதுப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News