உள்ளூர் செய்திகள்

தருமபுரி மாவட்டத்தில் இடி மின்னலுடன் கனமழை கொட்டியது

Published On 2024-05-05 06:49 GMT   |   Update On 2024-05-05 06:49 GMT
  • மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
  • பென்னாகரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

தருமபுரி:

தருமபுரி மாவட்டத்தில் கோடைக்கு முன்பே கடுமையாக வெப்பம் வீசி வந்தது. கோடை வெயில் தொடங்கியவுடன் 100 பாரன்ஹீட் வெயில் பதிவாகி சதம் அடித்து வந்த நிலையில் ஏப்ரல் மாதம் முழுவதும் 104 பாரன்ஹீட் வெப்பம் தொடங்கி 108. 7 பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. கடும் வெப்பத்தால் அனல் காற்று வீசியதில் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகினர்.

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு 108.5 பாரன்ஹீட் அளவில் கடுமையான வெப்பம் தாக்கியதில் தார் சாலைகளில் வெப்பம் பட்டு வெப்பத்துடன் சேர்ந்து அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச் சோடி காணப்பட்டது. பின்னர் மாலை திடீரென 5 மணிக்கு மேல் சூறாவளி காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது. இதனால் குளிர்ந்த சீதோசன நிலை நிலவி பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வானம் போர்வையால் போர்த்தியது போல் மேக மூட்டத்துடன் காணப்பட்டாலும் வெப்பத்தின் தாக்கம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று 106.1 பாரன்ஹீட் வெப்பம் பதிவான நிலையில் மாலை திடீரென தருமபுரி , பாரதிபுரம், ஒட்டப்பட்டி, அதனைச் சுற்றியுள்ள தடங்கம், ஆட்டுக்காரன் பட்டி, சோலை கொட்டாய், வத்தல்மலை உள்ளிட்ட பகுதிகளிலும் இடி மின்னலுடன் மழை கொட்டி தீர்த்தது.

பாலக்கோடு, அரூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் அனல் காற்றின் தாக்கம் தணிந்து குளிர்ந்த சீதோசன நிலை நிலவியது. மேலும் இந்த திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கத்திரிப்பிறந்த முதல் நாளே மழை ஆலங்கட்டியுடன் கொட்டி தீர்த்தது. தொடர்ந்து கோடை மழை பெய்தால் வறட்சியால் தண்ணீர் இன்றி கருகும் பயிர்களை பாதுகாக்க முடியும் என விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

நேற்று இரவு திடீரென பென்னாகரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏரியூர் செல்லும் சாலை ஓரத்தில் இருந்த மரங்கள் சாய்ந்தது. இதனால் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் மின்சரா துறையினர் சாலையில் விழுந்த மரங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.கடும் வெயில் தாக்கம் அதிகம் இருந்த நிலையில் திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News