செய்திகள்

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் மேல்முறையீடு

Published On 2018-04-11 08:23 GMT   |   Update On 2018-04-11 08:23 GMT
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தூக்குதண்டனை பெற்ற தஷ்வந்த், தண்டனையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளான். இவனது மனுவுக்கு பதில் அளிக்க போலீசாருக்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

சென்னை, போரூரை அடுத்த மதநந்தபுரத்தை சேர்ந்த பாபு என்பவரது 6 வயது மகள் ஹாசினி. சிறுமி ஹாசினி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது நண்பருடன் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று மாயமானார்.

இது குறித்து மாங்காடு காவல்நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியில் குடியிருக்கும் தஷ்வந்த் என்ற வாலிபர், அந்த குழந்தையை தன் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் கொடுமை செய்து, கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, தஷ்வந்துக்கு அதிகபட்ச தண்டனையான தூக்குதண்டனையை விதித்து தீர்ப்பு அளித்தார். இந்த தூக்குதண்டனையை உறுதி செய்ய, இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதேபோல, இந்த தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் மேல்முறையீடு செய்துள்ளார்.


அந்த மனுவில், ‘இந்த வழக்கு தொடர்பாக சான்று பொருட்கள் பறிமுதல் செய்ததில் சட்ட விதிமுறைகள் பின்பற்றபடவில்லை. சாட்சிகள் முன்னுக்குப்பின் முரணாக சாட்சியம் அளித்துள்ளனர். ஆனால் இதனை கீழ் கோர்ட்டு கவனிக்கத் தவறி விட்டது’ என்று கூறியுள்ளார்.

மேலும் அந்த மனுவில், ‘மகளிர் கோர்ட்டு நீதிபதி என்னுடைய தரப்பு வாதங்களை முழுமையாக கருத்தில் கொள்ளாமல் எனக்கு தூக்குத் தண்டனை கொடுத்து விட்டார். எனவே, இந்த தண்டனையை ரத்து செய்யவேண்டும்’ என்றும் கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் விமலா, ராமதிலகம் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்றக் கொண்ட நீதிபதிகள், தஷ்வந்தின் மேல்முறையீட்டு மனுவுக்கு 4 வாரத்துக்குள் மாங்காடு போலீசார் பதில் அளிக்க வேண்டும்’ என்று நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர். #Daswanth #HasiniMurderCase
Tags:    

Similar News