புதுச்சேரி

மருந்து கொள்முதல் முறைகேடு தொடர்பாக மத்திய தணிக்கை குழுவினர் அதிரடி விசாரணை

Published On 2024-05-04 04:10 GMT   |   Update On 2024-05-04 04:10 GMT
  • அரசு பள்ளிகளில் வழங்கப்பட்ட தரமற்ற சத்து மாத்திரைகளால் மாணவர்களும் பாதிப்புக்குள்ளாகினர்.
  • மோசடி குறித்து சுகாதாரத்துறை சிறப்பு பணி அதிகாரி , லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

புதுச்சேரி:

புதுச்சேரியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமுதாய நலவழி மையங்களில் 2018-19-ம் ஆண்டுகளில் கர்ப்பிணிகளுக்கு தரமற்ற மருந்துகள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.

அதேபோல் அரசு பள்ளிகளில் வழங்கப்பட்ட தரமற்ற சத்து மாத்திரைகளால் மாணவர்களும் பாதிப்புக்குள்ளாகினர். குறிப்பிட்ட இரு தனியார் ஏஜென்ஸிகள் இந்த தரமற்ற மருந்து, மாத்திரைகளை வழங்கியதும், புதுச்சேரி தேசிய ஊரக சுகாதார இயக்க (என்.ஆர்.எச்.எம்.) மருந்தாளுநர் நடராஜன் மற்றும் என்ஆர்எச்எம் அதிகாரிகளுக்கு இதில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

மருந்தாளுநர் நடராஜனின் மனைவி மற்றும் நண்பரின் ஏஜென்ஸிகள் மூலமாக இந்த மருந்து, மாத்திரைகளை கொள்முதல் செய்து முறைகேட்டில் ஈடுபட்டதும், இதன் மூலமாக அரசுக்கு ரூ.44 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, மருந்தாளுநர் நடராஜன் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த மோசடி குறித்து சுகாதாரத்துறை சிறப்பு பணி அதிகாரி மேரி ஜோஸ்பின் சித்ரா, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

இதன்பேரில் மருந்தாளுநர் நடராஜன் மற்றும் என்.ஆர்.எச்.எம் அதிகாரிகள் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மருந்தாளுநர் நடராஜனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இதனிடையே புதுச்சேரி சட்டப்பேரவை அருகேயுள்ள மாநில சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் உள்ள மருந்து, மாத்திரை கொள்முதல் செய்யும் பிரிவில் புதுச்சேரி லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் என்.ஆர்.எச்.எம். அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மருந்துகளையும் அங்கிருந்து பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.

இதையடுத்து மருந்து கொள்முதல் வழக்கு தொடர்பாக இந்திய தணிக்கை குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய தணிக்கை குழுவினர் புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் உள்ள என்.ஆர்.எச்.எம் பிரிவு அதிகாரிகள், ஊழியர்களிடம் கடந்த 4 நாட்களாக விசாணை நடத்தி வருகின்றனர்.

மத்திய தணிக்கை குழு விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பித்த பிறகு இந்த வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என்று தெரிகிறது. மத்திய தணிக்கை குழுவினரின் அதிரடி விசாரணையால் புதுச்சேரி சுகாதாரத்துறை அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

Tags:    

Similar News