சிறுநீரகத்தை பாதிக்கும் இருமல் மருந்து விற்க புதுச்சேரியில் தடை
- ’அல்மான்ட் கிட் சிரப்’ மருந்தில், சிறுநீரகத்தை பாதிக்கும் ’எத்திலீன் கிளைகோல்’ அதிகளவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
- விநியோகிஸ்தர்கள், மருந்துக் கடை உரிமையாளர்கள் இந்த மருந்தை விற்க வேண்டாம்.
புதுச்சேரி:
பீகார் மாநிலம், ஹாஜிபூர் வைஷாலியில் உள்ள ட்ரிடஸ் ரெமிடீஸ் நிறுவன தயாரிப்பான, 'அல்மான்ட் கிட் சிரப்' மருந்தில், சிறுநீரகத்தை பாதிக்கும் 'எத்திலீன் கிளைகோல்' அதிகளவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து கிழக்கு மண்டலத்தின் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு துறை, அல்மான்ட் கிட் மருந்தை தடை செய்து, அனைத்து மாநில மருந்து கட்டுப்பாட்டு துறைக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. கொல்கத்தா மற்றும் தெலுங்கானாவில் இம்மருந்து விற்பனைக்கு உடனடியாக தடை விதிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து புதுச்சேரியிலும் இம்மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி மருந்து தர கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரி ஆனந்த கிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
அல்மான்ட் கிட் சிரப்பில் எத்திலின் கிளை கோலின் அதிகளவு இருப்பது தெரியவந்துள்ளது. எனவே இந்த சிரப்பை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம்.
விநியோகிஸ்தர்கள், மருந்துக் கடை உரிமையாளர்கள் இந்த மருந்தை விற்க வேண்டாம். இருப்பில் உள்ள மருந்துகளை நிறுவனத்திற்கே திருப்பி அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.