புதுச்சேரி

மின்துறை தனியார் மயமாக்கப்படுவது ரத்தாகிறது- அரசு நடவடிக்கை

Published On 2026-01-06 10:30 IST   |   Update On 2026-01-06 10:30:00 IST
  • மின்துறையை தனியார் மயமாக்குவதற்கான ஏற்பாடுகள் அரசு தரப்பில் தொடர்ந்து வந்தன.
  • அரசின் பேச்சுவார்த்தைக்கு பிறகு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

புதுச்சேரி:

மத்திய அரசு கடந்த 2020-ம் ஆண்டு யூனியன் பிரதேசங்களில் மின் வினியோகம் தனியார் மயமாக்கப்படும் என்று அறிவித்தது. புதுச்சேரியில் இதை அமல்படுத்த அப்போதைய முதல்-அமைச்சர் நாராயணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில் என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு மின்துறையை தனியார் மயமாக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. தனியார் மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் முதல்-அமைச்சர் ரங்கசாமி, மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இருப்பினும் மின்துறையை தனியார் மயமாக்குவதற்கான ஏற்பாடுகள் அரசு தரப்பில் தொடர்ந்து வந்தன. 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்துறை தனியார் மயமாக்குவதை உறுதி செய்யும் வகையில் புதுச்சேரி மின்சார பகிர்மான கம்பெனி என்ற பெயரில் 100 சதவீத பங்குகளை தனியாருக்கு வழங்குவதற்கான டெண்டர் வெளியிடப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கை மின்துறை ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஊழியர்கள் குதித்தனர்.

இதனால் மின் பழுது நீக்குதல், புதிய இணைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடங்கின. பல இடங்களில் நாள் முழுவதும் மின்சாரம் தடைப்பட்டது. இதனால் பொதுமக்கள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினர். பின்னர் அரசின் பேச்சுவார்த்தைக்கு பிறகு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்தநிலையில் மின்துறை தனியார் மயத்துக்கான 100 சதவீத பங்குகளை விற்பனை செய்வதற்கான டெண்டர் தொடர்ந்து பலமுறை கால நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது. மின்துறையின் 100 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதற்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நிர்வாக காரணங்களுக்காக டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மின்துறை தெரிவித்துள்ளது. இதனால் புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்கப்படாது என்பது உறுதியாகியுள்ளது.

Tags:    

Similar News