புதுச்சேரி

புதுச்சேரியில் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய போலீஸ் அதிகாரி இடமாற்றம்

Published On 2026-01-05 07:36 IST   |   Update On 2026-01-05 07:36:00 IST
  • புதுச்சேரியில் கடந்த மாதம் 9-ந்தேதி த.வெ..க. பொதுக்கூட்டம் உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் நடந்தது.
  • எங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொல்லித்தரத் தேவையில்லை, என்று தனி ஆளாக நின்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

புதுச்சேரி:

புதுச்சேரியில் கடந்த மாதம் 9-ந்தேதி த.வெ..க. பொதுக்கூட்டம் உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள 5 ஆயிரம் பேருக்கு மட்டும் பாஸ் வழங்கப்பட்டது. தொண்டர்களை மைதானம் உள்ளே அனுமதிக்கும் பொறுப்பு லஞ்ச ஒழிப்பு துறை சீனியர் போலீஸ் சூப்பிரண்டான இஷா சிங்கிற்கு வழங்கப்பட்டது.

கூட்டத்திற்கு காலை முதலே தொண்டர்கள் குவியத்தொடங்கினர். இதற்கிடையே கூட்டம் அதிகரித்தபோது தொண்டர்கள் முண்டி அடித்துக்கொண்டு உள்ளே செல்ல முயற்சி செய்தனர். நுழைவாயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், சினியர் போலீஸ் சூப்பிரண்டு இஷா சிங்கிடம், மைதானத்தில் ஏராளமான இடம் உள்ளது. பாஸ் இல்லாத தொண்டர்களையும் உள்ளே அனுமதிக்கலாம் என்று கோரிக்கை விடுத்தார்.

இதனால் ஆவேசம் அடைந்த போலீஸ் சூப்பிரண்டு இஷா சிங், சிங்கப்பெண்ணாக மாறி, காவல்துறை என்ன செய்ய வேண்டும்? என நீங்கள் சொல்லாதீர்கள். கரூரில் 41 பேர் உயிரிழந்ததை மறந்து விட்டீர்களா? இங்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டால் நாங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும், பதில் சொல்ல வேண்டும். உங்களுக்கு அளிக்கப்பட்ட நிபந்தனைகளை சரியாக பின்பற்றுங்கள். எங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொல்லித்தரத் தேவையில்லை, என்று தனி ஆளாக நின்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இதனை தொடர்ந்து அவரை புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு இன்ஸ்டாகிராமில் பாராட்டுகள் குவிந்தன. இதனால் அவர் உயர் போலீஸ் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகியதாக தெரிகிறது.

இந்த நிலையில் தற்போது ஐ.பி.எஸ். அதிகாரி இஷா சிங் டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.

Tags:    

Similar News