செய்திகள்

பெரியார் சிலை அவமதிப்பு - திருமாவளவன் கண்டனம்

Published On 2018-03-21 06:15 GMT   |   Update On 2018-03-21 06:15 GMT
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பெரியார் சிலையின் தலையை உடைத்து சேதப்படுத்தி இருக்கிறார்கள். அது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் மத்திய பாதுகாப்பு படை போலீஸ் என்றும், மது போதையில் இருந்ததால் உடைத்தார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த சம்பவம் எதேச்சையாக நடந்ததாக தெரியவில்லை. அண்மைக்காலமாக மதவாத அமைப்புகளை சார்ந்தவர்கள் பெரியார் சிலைகளை உடைப்போம் என்று பேசி வந்ததன் விளைவாக இது நடந்திருக்கிறது.

ஏற்கனவே வேலூர் மாவட்டம் திருப்பதூரில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் நாமக்கல் அருகே பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி துணியை கட்டியிருந்தனர். ஆகவே தமிழகத்தில் பெரியாருக்கு எதிராகவும், சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் வன்முறையை தூண்டி ரத்தகளறியை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேட சிலர் முயற்சிப்பதாக தெரிகிறது.

எனவே தமிழக அரசு இதனை இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஒரு சிலரை கைது செய்வதோடு மட்டும் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. பெரியாருக்கு எதிராக, சிறுபான்மை மக்களுக்கு எதிராக பேசிவரும் எச்.ராஜா உள்ளிட்ட மதவாத சக்திகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரை கூடல் நகரில் பைபிளை எரித்த சமூக விரோத கும்பல் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியார் சிலைகளை அவமதித்ததை தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது பெரியார், அண்ணா ஆகியோருக்கு செய்யும் துரோகமாகும்.

எனவே தமிழகத்தில் சமூக, மத நல்லிணக்கத்தை பேணி பாதுகாத்திட சாதிய, மதவாத சக்திகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் என தமிழக அரசை வற்புறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #tamilnews
Tags:    

Similar News