செய்திகள்

அ.ம.மு.க. கொடிக்கு தடை கேட்டு வழக்கு- தினகரன் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2018-03-20 09:35 GMT   |   Update On 2018-03-20 09:35 GMT
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கொடிக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் வருகிற 27-ந்தேதிக்குள் டி.டி.வி. தினகரன் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற அமைப்பை மதுரையில் கடந்த வாரம் டி.டி.வி.தினகரன் தொடங்கினார். அப்போது அந்த அமைப்புக்கான கொடியையும் அவர் வெளியிட்டார். அந்த கொடி, அ.தி.மு.க. கொடியை போல உள்ளதாக கூறி, சென்னை ஐகோர்ட்டில் முதல்அமைச்சரும், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடி, அ.இ.அ.தி.மு.க.வின் கொடியை போல கருப்பு, சிவப்பு, வெள்ளை நிறத்தில் உள்ளது.

எனவே, அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் உருவாக்கியுள்ள புதிய கொடியை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். அ.தி.மு.க.வின் கொடியில் உள்ள நிறங்களைப் பயன்படுத்தியதற்காக, ரூ.25 லட்சம் எங்களுக்கு இழப்பீடு வழங்க டி.டி.வி.தினகரனுக்கு உத்தரவிட வேண்டும். இந்த சிவில் வழக்கை தொடர தனக்கு அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி கார்த்திக்கேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டி.டி.வி. தினகரன் தரப்பில் வக்கீல் ஆஜராகி, ‘டி.டி.வி. தினகரனின் சித்தப்பா நடராஜன் நேற்று இரவு காலமானார். அதனால், இந்த வழக்கிற்கு பதில் அளிக்க டி.டி.வி. தினகரனுக்கு கால அவகாசம் வழங்கவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி சி.வி.கார்த்திகேயன், ‘வழக்கு விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். அன்று டி.டி.வி.தினகரன் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். #Tamilnews
Tags:    

Similar News