செய்திகள்

விவாகரத்து நோட்டீசு அனுப்பியதால் ஆசிட் வீசப்போவதாக வங்கி பெண் அதிகாரிக்கு கணவர் மிரட்டல்

Published On 2018-03-12 10:45 GMT   |   Update On 2018-03-12 10:45 GMT
விவாகரத்து கேட்டு நோட்டீசு அனுப்பியதால் ஆத்திரம் அடைந்த கணவர் வங்கி பெண் அதிகாரியின் முகத்தில் ஆசிட் வீச போவதாக மிரட்டினார்.
புதுச்சேரி:

புதுவை முத்தியால்பேட்டை புதுத்தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகள் சிந்துஜா (வயது25). இவர் புதுவையில் உள்ள தேசிய வங்கி ஒன்றில் துணை பொதுமேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த பெயிண்ட் கடை நடத்தி வரும் கண்ணன் என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.

திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கணவரை விட்டு பிரிந்து சிந்துஜா பெற்றோர் வீட்டிலேயே வசித்து வருகிறார். மேலும் கணவனிடம் விவாகரத்து கேட்டு சிந்துஜா நோட்டீசு அனுப்பினார்.

இதனால் சிந்துஜா மீது கண்ணன் ஆத்திரத்தில் இருந்தார். சம்பவத்தன்று சிந்துஜா கிழக்குகடற்கரை சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு தோழியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது அங்கு வந்த கண்ணன் வழிமறித்து தனியாக பேச வேண்டும் என சிந்துஜாவை அழைத்தார். ஆனால் இதற்கு சிந்துஜா சம்மதிக்கவில்லை. அப்போது ஆவேசம் அடைந்த கண்ணன் ஆசிட்டை எடுத்து முகத்தில் வீசிவிடுவேன் என சிந்துஜாவை மிரட்டினார். மேலும் சிந்துஜாவை கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் தாக்கினார். இதனை தடுக்க முயன்ற சிந்துஜாவின் தோழியையும் கண்ணன் தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டார்.

இதுகுறித்து சிந்துஜா கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கணண்ன், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் , ஏட்டு வெங்கடேசன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News