செய்திகள்

நிதின்கட்காரி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய வேண்டும்- வைகோ

Published On 2018-03-03 06:30 GMT   |   Update On 2018-03-03 06:30 GMT
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கெடு விதித்து இருப்பது குறித்து மத்திய மந்திரியின் பொறுப்பற்ற பதிலுக்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வைகோ கூறினார். #Vaiko
புதுச்சேரி:

தனித் தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் பங்கேற்க புதுவை வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி பிரச்சனையில் மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டே தமிழகத்துக்கு துரோகம் செய்து விட்டது. காவிரி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தமிழகத்துக்கு ஒருதலைபட்சமான தீர்ப்பை அளித்துள்ளது. தமிழகத்துக்கு தண்ணீரை அதிகமாக கேட்டிருந்தோம். ஆனால், ஏற்கனவே வழங்கி கொண்டு இருந்த தண்ணீரின் அளவில் 14.75 டி.எம்.சி.யை குறைத்து விட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதில், அனைத்து கட்சி தலைவர்களும் பிரதமரை சந்திப்பது, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

கர்நாடக மாநில தேர்தலை மனதில் வைத்து கொண்டு பிரதமர் மோடி நேரம் ஒதுக்கவில்லை.

தமிழக அரசை வேண்டுமானால் பிரதமர் கிள்ளுக்கீரையாக நினைக்கலாம். தமிழர்களை அப்படி நினைத்து விடாதீர்கள். அப்படி எண்ணினால் அது உங்களின் அறியாமையின் வெளிப்பாடு ஆகும்.


தற்போது கர்நாடக மாநிலத்திலும் அனைத்து கட்சி கூட்டம் நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்கிடையே காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்துக்குள் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கெடு விதித்து இருப்பது குறித்து மத்திய மந்திரி நிதின்கட்காரி சாத்தியமற்றது என கூறியுள்ளார். பொறுப்பற்ற இந்த பதிலுக்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு வைகோ கூறினார். #Tamilnews
Tags:    

Similar News