செய்திகள்

மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வுக்கு அரசு ஒப்புதல்

Published On 2018-02-20 08:40 GMT   |   Update On 2018-02-20 08:40 GMT
கடந்த 16-ம் தேதி முதல் ஊதிய உயர்வு கோரி சில தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட நிலையில், 2.57 காரணி ஊதிய உயர்வுக்கு அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #TNEBStrike
சென்னை:

மின்வாரிய ஊழியர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால் 26 மாதங்களாக ஊதிய உயர்வு வழங்குவது காலதாமதமாகி வருகிறது. இதை கண்டித்து கடந்த மாதம் 23-ம் தேதி அன்று சி.ஐ.டி.யு. மற்றும் பி.எம்.எஸ். ஆகிய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பை வெளியிட்டன.

வேலை நிறுத்த அறிவிப்பு வெளியானதும் உடனடி நடவடிக்கையாக கடந்த மாதம் 22-ம் தேதி அன்று தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் சமரசப் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் மின்வாரிய உயர் அதிகாரிகள், தொழிலாளர் நல அதிகாரிகள், தொழிற்சங்கத்தினர் கலந்த கொண்டனர். அப்போது 12-ம் தேதி ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தம் காணப்படும் என்று முத்தரப்பு பேச்சுவார்த்தையின் போது அரசின் சார்பில் உறுதியளிக்கப்பட்டது.

ஆனால், இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தாமல், மின்சார வாரிய ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து, நடத்தப்பட்ட எந்த பேச்சுவார்த்தையிலும் முன்னேற்றம் ஏற்படாததால் சி.ஐ.டி.யு உள்ளிட்ட சில தொழிற்சங்கங்கள் 16-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.

இதனால், பெரிதளவில் அரசுப்பணிகள் பாதிக்கப்படவில்லை என்றாலும் கோரிக்கைகள் வலுத்துக்கொண்டே சென்றது. இந்நிலையில், 2.57 காரணி ஊதிய உயர்வுக்கு அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

22-ம் தேதி புதிய ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. #TNEBStrike #TamilNews
Tags:    

Similar News