செய்திகள்

மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை

Published On 2018-02-09 08:07 GMT   |   Update On 2018-02-09 08:07 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதித்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. #MeenakshiAmmanTemple
மதுரை:

மதுரையைச் சேர்ந்த வக்கீல் முத்துக்குமார் ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2-ந்தேதி ஏற்பட்ட தீ விபத்து பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவில் வளாகத்தில் 115 கடைகளுக்கு மட்டுமே அனுமதி உள்ள நிலையில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வந்துள்ளன. இது நிர்வாக குளறுபடி ஆகும்.

கடந்த 2009-ம் ஆண்டு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்க தேசிய புலனாய்வு அமைப்பு அரசுக்கு கடிதம் அனுப்பியது. ஆனால் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

1997-ம் ஆண்டு மீனாட்சி அம்மன் கோவில், ராமநாதபுரம் ராமநாதசுவாமி கோவில் ஆகியவற்றை புராதன சின்னங்களாக பறைசாற்ற அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அதுவும் நிறைவேற்றப்படவில்லை.

எனவே பக்தர்களின் நலனை பாதுகாக்க மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு வழிகாட்டி ஏற்படுத்தி அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். இதனை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.


இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், தாரணி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், மீனாட்சி அம்மன் கோவிலின் பாதுகாப்பு நலன் கருதி கோவிலுக்குள் அரசு அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் தவிர மற்றவர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதித்தனர்.

மேலும் கோவில் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். கோவிலில் தீ தடுப்பு கருவிகள் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அந்த கருவிகளை கையாளுவது குறித்து கோவில் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கவேண்டும். கோவில் முழு மின் இணைப்பையும் மாற்றி அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

மீனாட்சி அம்மன் கோவிலின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிக்காக தொல்லியல் நிபுணர்கள் அடங்கிய உயர் மட்ட குழு அமைப்பது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரை (சி.ஐ.எஸ்.எப்) பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தலாம். இதுதொடர்பாக தமிழக அரசு மார்ச் 13-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். #Tamilnews
Tags:    

Similar News