செய்திகள்

வலங்கைமான் அருகே கோஷ்டி மோதலில் வாலிபர் கொலை: வீட்டுக்கு தீவைப்பு

Published On 2018-01-21 16:31 GMT   |   Update On 2018-01-21 16:31 GMT
வலங்கைமான் அருகே இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் வாலிபர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வலங்கைமான்:

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள நார்த்தாங்குடி தெற்கு தெருவில் வசிக்கும் இரு குடும்பத்தினர் இடையே முன் பகை காரணமாக கடந்த மாதம் 27-ந் தேதி தகராறு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து இரு தரப்பினரும் ஆயுதங்களுடன் மோதி கொண்டனர். இந்த சம்பவத்தில் ஒரு தரப்பை சேர்ந்த அர்ச்சுணன், அரவிந்தன், ராஜேஷ் கண்ணா, நாகலட்சுமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட இன்னொரு தரப்பை சேர்ந்த அருண்ராஜ், ரகுபதி, சுரேந்தர்,சுதாகரன், கவுரி,அம்சவள்ளி ஆகியோர் மீது வலங்கைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து கவுரி , அம்சவள்ளி ஆகிய இருவரையும் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் அரிவாள் வெட்டில் தலையில் காயமடைந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரவணன் என்பவரின் மகன் அரவிந்தன் (வயது 22), இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் நார்த்தாங்குடியில் இன்று பரபரப்பான சூழ்நிலை நிலவியது. மேலும் ரவிச்சந்திரன் என்பவர் வீட்டுக்கு ஒரு தரப்பினர் தீ வைத்து விட்டனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் நன்னிலம் டி.எஸ்.பி. அருண் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தபட்டது. பொதுமக்கள் கோஷ்டியாக செல்ல தடை விதித்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீவைக்கப்பட்ட வீட்டில் மேலும் தீ பரவாமல் அணைத்தனர். இந்த சம்பவத்தால் நார்த்தாங் குடியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews

Tags:    

Similar News