செய்திகள்

ஆர்.கே.நகரில் ரூ.20 டோக்கனை தடுக்க முடியாத குற்ற உணர்வு எனக்கும் உள்ளது: கமல்ஹாசன்

Published On 2018-01-11 07:43 GMT   |   Update On 2018-01-11 07:43 GMT
ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் போது 20ரூபாய் டோக்கனை தடுக்க முடியாத குற்ற உணர்வு எனக்கும் உள்ளது என்று கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை:

நடிகர் கமல்ஹாசன் ‘‘ஆனந்த விகடன்’’ வார இதழில் எழுதி வரும் தொடரில் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் பற்றி மீண்டும் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பற்றி விமர்சனம் வைக்கும் நீங்கள் ஏன் அதில் பங்கெடுக்கவில்லை என்கிறார்கள்.

ஆமாம், நடந்த அந்தக் குற்றத்தை ஒப்புக் கொள்வதன் மூலம் நான் என்னையே அவமானப்படுத்திக் கொள்கிறேன். ஆர்.கே.நகரில் குடியிருந்து டோக்கன் வாங்கியிருந்தால்தான் அசிங்கமா? வெளியில இருந்து அது நிகழப் பார்த்துக் கொண்டு இருந்தேனே, அந்தக் குற்றவுணர்வு எனக்கும் உண்டே.

அதைத் தடுக்க என்ன செய்தோம். அதில் ஏதாவது ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தவர்களின் முயற்சி என்ன ஆனது?

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பற்றி உங்கள் கருத்தைச் சொன்னீர்கள். அதற்கு எதிர்க் கருத்து சொல்லாமல், உருவ பொம்மை எரிப்பு, வழக்கு என்று சென்றனர். அவர்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய நற்பணி மன்றத்தாரையும் ‘தலைமையின் அனுமதியின்றிச் செய்யாதீர்கள்’ என்கிறீர்கள். ஆர்ப்பாட்டம் செய்யக்கூட அனுமதியளிக்காத இதுவும் சர்வாதிகாரம் தானே?’’ இப்படியும் சொல்கிறார்கள் சிலர். இதில் சர்வாதிகாரம் ஒன்றும் இல்லை. அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டியது என் கடமை.

இரண்டு பேருக்குள் முடியும் இந்த வி‌ஷயத்தில் நாம் மக்களை ஈடுபடுத்த வேண்டியதில்லை. இந்தப் பிரச்சினையே ஆக்கபூர்வமான விவாதமாக வடிவெடுக்கும் போது, அப்போது கலந்து பேசி, கூட்டங்கள் நடத்திக் கருத்துக்களைச் சொல்லலாமே தவிர, நேர் செய்யும் வெற்றுச் கூச்சல், வெட்டி பந்தா தேவையற்றது.



‘‘மய்யம் விசில் செயலி ஜனவரியில் செயல்படத் தொடங்கும் என்றீர்களே, என்ன ஆனது’’ என்கிறார்கள் சிலர்.

பொங்கலுக்குக் கொடுக்குறேன்னு சொன்னீங்க. இன்னும் கரும்பே கொடுக்கலையே என்பது போன்ற வி‌ஷயம் கிடையாது. சிலருக்கு இது கரும்பாகக் கூட இருக்காது, கசக்கும் மருந்தாக இருக்கும்.

அதனால் இதை ஜாக்கிரதையாகப் பண்ண வேண்டும். இதில் நேர்மை இருக்க வேண்டும். நல்ல விதமாக வேலை செய்ய வேண்டும். வேறு தவறுகள் வந்து விடக்கூடாது. சரியாகச் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

அதற்கான எல்லா டெஸ்டிங்கும் நடந்து கொண்டிருக்கிறது. இதை வெளியில் விட்ட பிறகு ஒவ்வொருவராகப் பிழைகளைச் சொல்லச் சொல்லத் திருத்துவதைவிட, அதற்கு முன்னரே திருத்திக் கொண்டு பிறகு மக்களிடம் கொண்டு போனால், உடனடியாகப் பயன்பாட்டுக்கு வரும்.

சரியாகக் கொண்டு வந்து சேர்த்தால்தான் பிரயோஜனப் படக்கூடிய கருவியாக இருக்கும். அதற்காகத்தான் இந்தத் தாமதம்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறி உள்ளார். #KamalHaasan #TamilNews
Tags:    

Similar News