இந்தியா

ஒவ்வொரு இந்தியனும் எங்களுடைய வாக்குவங்கி: பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்

Published On 2024-05-02 09:37 GMT   |   Update On 2024-05-02 09:37 GMT
  • உங்கள் பேச்சுகளில் உள்ள பொய்கள் நீங்கள் நினைத்ததை கொண்டிருக்கவில்லை என்பதுபோல் கடிதம் தோற்றமளிக்கிறது.
  • இப்போது உங்கள் வேட்பாளர்கள் உங்கள் பொய்களைப் பெரிதாக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்.

காங்கிரஸ் கட்சி எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி-யின் இடஒதுக்கீடுகளை பறித்து அவர்களுக்கு வாங்கி வங்கிக்கு கொடுக்க இருப்பதாகவும், மதம் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க இருப்பதாகவும் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின்போது தொடர்ந்து கூறி வருகிறார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

ஏழை, விளிம்பு நிலையில் இருப்பவர்கள், பெண்கள், ஆர்வமுள்ள இளைஞர்கள், தொழிலாளர் வகுப்பை சேர்ந்தவர்கள், தலித் மற்றும் பழங்குடியினர் உள்ளிட்ட ஒவ்வொரு இந்தியனும் எங்களுடைய வாக்கு வங்கி. வெறுப்பு பேச்சில் ஈடுபடுவதற்குப் பதிலாக கடந்த 10 ஆண்டுகளில் உங்களுடைய அரசு செய்த செயல்பாட்டை மக்களிடம் தெரிவித்து வாக்கு கேளுங்கள்.

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு நீங்கள் எழுதிய கடிதத்தில், வேட்பாளர்களிடம் வாக்கு கேட்கும்போது என்ன தெரிவிக்க வேண்டும் என்பது குறித்து பார்த்தேன்.

கடிதத்தின் உள்ளடக்கத்தைப் பார்க்கும்போது உங்களுக்குள் மிகுந்த விரக்தியும் கவலையும் இருப்பதாகத் தெரிகிறது. இது பிரதமரின் அலுவலகத்திற்குப் பொருந்தாத மொழியைப் பயன்படுத்த உங்களை வழி நடத்துகிறது.

உங்கள் பேச்சுகளில் உள்ள பொய்கள் நீங்கள் நினைத்ததை கொண்டிருக்கவில்லை என்பதுபோல் அந்தக் கடிதம் தோற்றமளிக்கிறது. இப்போது உங்கள் வேட்பாளர்கள் உங்கள் பொய்களைப் பெரிதாக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். பொய்யை ஆயிரம் முறை சொன்னாலும் அது உண்மை ஆகாது.

எங்கள் தேர்தல் அறிக்கை உத்தரவாதங்கள் மிகவும் எளிமையானவை மற்றும் தெளிவானவை, நாங்கள் அதை விளக்க வேண்டியதில்லை. உங்கள் நலனுக்காக, அவற்றை மீண்டும் இங்கு வலியுறுத்துகிறேன் (தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கியமான விசயங்களை குறிப்பிட்டுள்ளார்).

காங்கிரஸ் திருப்திப்படுத்தும் அரசியலை மேற்கொள்கிறது என்று நீங்களும் உள்துறை அமைச்சரும் சொல்வதை நாங்கள் கேட்டிருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் கண்ட ஒரே திருப்திப்படுத்தும் கொள்கை, நீங்களும் உங்கள் அமைச்சர்களும் சீனர்களைத் திருப்திப்படுத்துவதுதான். இன்னும் நீங்கள் சீனாவை ஊடுருவிகள் என அழைக்க மறுக்கிறீர்கள். நீங்கள் ஒருவர் கூட ஊடுருவவில்லை எனக்கூறி கல்வான் பள்ளத்தாக்கில் வீர மரணம் அடைந்து 20 வீரர்களை இழிவு படுத்துகிறீர்கள்.

சீனாவுக்கு க்ளின் சீட் வழங்கி, இந்தியாவின் வழக்கை பழவீனப்படுத்தி, மேலும் போர்க்குணமாக்கியுள்ளனர். ராணுவ கட்டமைப்புகளை அருணாச்சல பிரதேசம், லடாக், உத்தரகாண்ட் எல்லையில் உருவாக்கி தொடர்ந்து பதற்றம் அதிகரித்த நிலையில்தான் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களில் மதிப்பு 54.76 சதவீதம் அதிகரித்து, 2023-24-ல் 101 பில்லியன் அமெரிக்க டாலரை கடந்துள்ளது.

மக்கள் தொகை அடிப்படையில் அரசியலமைப்பு 16-வது பிரிவின்படி எஸ்.சி, எஸ்.டி., ஓபிசி இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் என்பது குறித்து விளக்க வேண்டும்.

உங்கள் கடிதத்தில் மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் பறிக்கப்பட்டு கொடுக்கப்படும் என்று கூறியுள்ளீர்கள். குஜராத்தில் ஏழை தலித் விவசாயிகளிடம் இருந்து மோசடி செய்து பாஜகவுக்கு தேர்தல் பத்திரமாக வழங்கப்பட்ட ரூ.10 கோடியை உங்கள் கட்சி திருப்பி கொடுக்குமாறு இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

முதல் இரண்டு கட்டத் தேர்தல்களில் குறைந்த வாக்காளர்கள் வாக்களித்ததால் நீங்கள் கவலைப்படுகிறீர்கள். உங்கள் கொள்கைகள் அல்லது உங்கள் பிரச்சார உரைகளில் மக்கள் ஆர்வமாக இல்லை என்பதை இது காட்டுகிறது. இது கோடை வெயிலால் அல்ல, உங்களின் கொள்கைகளால் ஏழைகள் வாடுகிறார்கள்.

உங்கள் தலைவர்களால் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருவதைப் பற்றி பேச உங்களுக்கு ஆர்வம் இல்லை.

வெறுப்புப் பேச்சுக்களுக்குப் பதிலாக, கடந்த பத்து வருடங்களில் உங்கள் அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கு வாக்குஅளிக்கும்படி கேட்பது சிறந்ததாக இருக்கும். தேர்தல் முடிந்ததும், தவிர்க்க முடியாத தோல்வியைத் தவிர்க்கும் வகையில் மக்களைப் பிளவுபடுத்தும் மற்றும் வகுப்புவாதப் பேச்சுக்களில் ஈடுபட்ட பொய்கள் நிறைந்த பிரதமராக மட்டுமே மக்கள் உங்களை நினைவு கூர்வார்கள்.

இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News