செய்திகள்

குமரி மாவட்டத்தை ஆய்வு செய்ய முதலமைச்சர் நேரில் வரவேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

Published On 2017-12-08 06:46 GMT   |   Update On 2017-12-08 06:46 GMT
குமரி மாவட்டத்தில் புயல் பாதிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
நாகர்கோவில்:-

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தேன். நேற்று மீனவ கிராமங்களுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தேன். அங்கு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மலைக்கிராம பகுதிகளுக்கு சென்றேன்.

தடிக்காரன்கோணம், பேச்சிப்பாறை பகுதிகளில் ஆய்வு செய்தேன். புயலால் அங்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வீடுகள் மீது விழுந்து கிடக்கும் மரங்கள் இதுவரை அப்புறப்படுத்தப்படவில்லை. வனத்துறையினரின் அனுமதி பெற்றே மரங்களை அப்புறப்படுத்த வேண்டியுள்ளது. இதுபோல வாழைமரங்கள், ரப்பர் தோட்டங்களும், விவசாய பயிர்களும் சேதம் அடைந்துள்ளன.

சேதம் அடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். புயலில் மாயமான மீனவ சகோதரர்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள். குஜராத்தில் கரை ஒதுங்கியவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அவர்களுக்கு தேவையான பெட்ஷீட் மற்றும் டீசல், உணவு போன்றவை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாயமான மீனவர்களை கண்டுபிடிப்பதில் மத்திய, மாநில அரசுகள் சரியாக செயல்படவில்லை என பொய்யான தோற்றம் பரப்பப்படுகிறது.


கடலுக்குள் 50 கடல் மைல் தொலைவே சென்று நடக்கும் தேடுதல் வேட்டையை மத்திய அரசின் முயற்சியால் 150 கடல் மைல் தொலைவுக்கு சென்று தேடுதல் நடத்த ஏற்பாடு செய்தோம். புயலால் மரணம் அடைந்த மீனவர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று நான் கோரிக்கை விடுத்தேன். மாநில அரசு இதை ஏற்று ரூ.10 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளது. புயலால் பலியான அனைவருக்கும் இந்த இழப்பீடு அளிக்கப்பட வேண்டும்.

புயலில் மாயமான 2,641 மீனவர்கள் மீட்கப்பட்டு வெளிமாநிலங்களில் தங்கியுள்ளனர். டெல்லி, சென்னையில் இருந்து தமிழ் பேசத் தெரிந்த உயர் அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர். அவர்களை மீட்டு வரவும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டு உள்ளது.

குமரி மாவட்டத்தில் நடந்த மீனவர் போராட்டம் அவர்களின் வேதனை மற்றும் சோகத்தின் வெளிப்பாடு. அந்த போராட்டத்தில் அரசியல் புகுந்து விடக்கூடாது. அரசியல்வாதிகள் இணைந்து பணியாற்ற வேண்டுமே தவிர அரசியலாக்கி குளிர் காயக்கூடாது.

போராட்டக்காரர்கள், அரசியல்வாதிகளின் பேய் பசிக்கு ஆளாகி விடக்கூடாது. குமரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி கப்பல் தளமும் இங்கு அவசியம் தேவையாகும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். இணையம் துறைமுகம் தொடர்பாக ஆய்வுகள் நடந்து வருகிறது. அதனை வேறு இடத்தில் அமைக்கலாமா? என்றும் ஆய்வுகள் நடத்தப்படுகிறது.

குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்புகளை கவர்னர் ஆய்வு செய்ததில் தவறு இல்லை. அவரது பயணத்திட்டம் புயல் தாக்குவதற்கு முன்பே திட்டமிடப்பட்டது. அவர் இங்கு வந்து மனிதாபிமான முறையில் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். அதனை அரசியலாக்க கூடாது.

குமரி மாவட்டத்தில் புயல் பாதிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும். அதிக நிவாரணம் வழங்க வேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், வீடுகளை, படகுகளை மீன் பிடி உபகரணங்களை இழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News