செய்திகள்

கேரளாவை போல தமிழகத்திலும் நிவாரண உதவி வழங்க வேண்டும்: பொன். ராதாகிருஷ்ணன்

Published On 2017-12-07 06:18 GMT   |   Update On 2017-12-07 06:18 GMT
ஒக்கி புயலால் இறந்தவர்களுக்கு கேரளாவில் அரசு உதவி வழங்குவதுபோல தமிழக அரசும் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

நாகர்கோவில்:

மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் இன்று கன்னியாகுமரி வந்த தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார்.

அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

தமிழக, கேரள மீனவர்கள் ஏராளமானோர் மராட்டியம், குஜராத், லட்சத்தீவு போன்ற பகுதிகளில் பத்திரமாக கரையேறி உள்ளனர். இது தொடர்பாக குஜராத், மராட்டிய அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். மீனவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் கடல் மார்க்கமாக ஊர் திரும்ப எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் செய்யப்பட்டுள்ளது. லட்சத்தீவில் உள்ள மீனவர்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள நிர்வாகத்தை தொடர்பு கொள்ள முடியாத சிக்கலான சூழ்நிலை உள்ளது. தொடர்ந்து முயற்சி நடந்து வருகிறது.

ஏற்கனவே குமரி மாவட்ட புயல் பாதிப்பு பற்றி உள்துறை மந்திரி, இணை மந்திரியை சந்தித்து பேசினேன். இன்று கவர்னரையும் சந்தித்து மீனவர்கள் பிரச்சினை பற்றியும் எடுத்து கூறினேன். குமரி மீனவர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

நாகர்கோவில் அகஸ்தீஸ்வரம், தோவாளை பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்துள்ளேன். இன்று திருவட்டார், குலசேகரம் பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளேன். பல பகுதிகளில் இன்னும் மரங்கள் அகற்றப்படவில்லை. வீடுகள் மீதும் மரங்கள் விழுந்து கிடக்கிறது.

பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடமும் அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடும் சரியாக இல்லை.

புயலால் இறந்தவர்களுக்கு கேரளாவில் அரசு உதவி வழங்குவதுபோல தமிழக அரசும் உதவித்தொகை வழங்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலையை புரிந்து செயல்பட வேண்டும். குமரி மாவட்டத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர்.

ஆனால் 500 பேர் மட்டும் அரசு பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்துள்ளனர். மத்திய அரசின் பயிர் காப்பீடு திட்டத்திலும் விவசாயிகள் இணைந்திருந்தால் மத்திய அரசின் இழப்பீடும் கிடைத்திருக்கும்.

கப்பல் படை கப்பல்கள், ஹெலிகாப்டர், விமானங்கள் மூலம் மாயமான மீனவர் களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News