செய்திகள்

கோவையில் வைத்துள்ள விளம்பர பேனர்களை உடனே அகற்ற வேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2017-11-30 08:22 GMT   |   Update On 2017-11-30 08:23 GMT
கோவையில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பர பேனர்களையும் உடனே அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

கோவையில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு பல பகுதிகளில் அ.தி.மு.க.வினர் ‘கட்அவுட்’, பேனர்கள், அலங்கார வளைவுகள் வைத்துள்ளனர்.

சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டு அருகே வைக்கப்பட்டுள்ள அலங்கார வளைவு ஒன்றின் மீது மோட்டார் சைக்கிளில் சென்ற ரங்கசாமி கவுண்டன் புதூரை சேர்ந்த கந்தசாமி என்பவரது மகன் ரகு மோதி கீழே விழுந்தார். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரி அவர் மீது ஏறி இறங்கியது. இதில் ரகு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.


ரகு அமெரிக்காவில் வேலை செய்து வருகிறார். திருமணத்துக்காக பெண் பார்க்க வந்த நிலையில், விபத்தில் சிக்கி பரிதாபமாக இறந்துள்ளார். அ.தி.மு.க.வினர் அனுமதி எதுவும் பெறாமல் வைத்த விளம்பர வளைவுகளால் இந்த விபத்து நடந்து வாலிபர் இறந்துள்ளதாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டினர்.

இந்த சம்பவம் குறித்து கோவை சிங்கநல்லுர் தி.மு.க. எம்.எல்.ஏ. கார்த்திக், ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘மனுதாரர் தாக்கல் செய்துள்ள புகைப்பட ஆதாரங்களை பார்க்கும் போது, நெறிமுறை இல்லாமல் பல இடங்களில் பேனர்கள், கட்அவுட்டுகள், அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டுள்ளது தெரிகிறது. இதனால் தான் என்ஜினீயர் ரகு விபத்தில் சிக்கி இறந்து இருப்பாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

எனவே, கோவையில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பர பேனர்களையும் உடனே அகற்ற வேண்டும். அனுமதி பெற்ற பேனர்களாக இருந்தாலும், அவை விதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறி இருந்தால், அவற்றையும் அகற்ற வேண்டும். விபத்தில் பலியான ரகுவின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News