செய்திகள்

அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து நர்சுகள் போராட்டம் தற்காலிக வாபஸ்

Published On 2017-11-28 15:50 GMT   |   Update On 2017-11-28 15:50 GMT
சுகாதரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் நர்சுகள் நடத்தி வந்த முற்றுகை போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.
சென்னை:

தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் 9990 நர்சுகள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.7700 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வும் ஆண்டுக்கு ரூ.500 வீதம் வழங்கப்படுகிறது. மருத்துவ தேர்வு வாரியம் மூலம் 2 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் நியமிக்கப்பட்ட இவர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி போராடி வருகிறார்கள்.

நேற்று முன்தினம் திடீரென சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் 2,000 நர்சுகள் அமர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த இவர்கள் தங்கள் குழந்தைகளையும் அழைத்து வந்து போராட்டத்தில் இறங்கினர்.

போராட்டத்தை முடக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. இருப்பினும், தங்களது கோரிக்கையில் உறுதியாக இருக்கும் அவர்கள் அசைந்து கொடுக்கவில்லை. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நர்சுகளுக்கு பொது சுகாதாரத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

அதில், நர்சுகள் பணிக்கு வராததால் அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நர்சுகளை ஏன் பணி நீக்கம் செய்யக்கூடாது? என கேட்கப்பட்டது.

இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், செயலாளர் ராதா கிருஷ்னன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 90 சதவிகித கோரிக்கைகள் ஏற்கப்படும் என அமைச்சர் உறுதியளித்ததால், நர்சுகள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.
Tags:    

Similar News