செய்திகள்

சிட்லபாக்கம், ஏரிக்கரையில் காங்கிரஸ் அலுவலகம் இடிப்பு: காமராஜர்-இந்திரா சிலைகள் அகற்றம்

Published On 2017-11-18 08:28 GMT   |   Update On 2017-11-18 08:28 GMT
சிட்லபாக்கம் ஏரிக்கரையில் காங்கிரஸ் அலுவலகத்தை இடித்த அதிகாரிகள் அலுவலகத்தின் முன்பு இருந்த காமராஜர், இந்திராகாந்தி ஆகியோரது சிலைகளையும் அகற்றினர்.
சென்னை:

சிட்லபாக்கம் ஏரிக்கரையில் நகர காங்கிரஸ் அலுவலகம் செயல்பட்டு வந்தது.

இந்த அலுவலகத்தின் முன்பு பெருந்தலைவர் காமராஜர், இந்திராகாந்தி ஆகியோரது சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றி வருகிறார்கள். அதன்படி சிட்லபாக்கம் ஏரிக்கரையிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றனர்.

அங்கிருந்த காங்கிரஸ் அலுவலகத்தை இடித்து தள்ளினார்கள். தலைவர்கள் சிலைகளையும் அகற்றி கீழே போட்டார்கள். தகவல் அறிந்ததும் காங்கிரஸ் தொண்டர்கள் அந்த பகுதியில் திரண்டனர். அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுபற்றி முன்னாள் மாவட்ட தலைவர் வி.ஆர்.சிவராமன் கூறியதாவது:-

சிட்லப்பாக்கம் பேரூராட்சியில் நீர்பிடிப்பற்ற பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை அகற்றுகின்றனர். நீர் ஆதாரங்கள், நீர்வழிப்பாதைகள் போன்றவற்றை நல்லமுறையில் பராமரிக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.

ஆனால் ஏரிக்கரையின் மேல்பகுதியில் இருந்த கட்சி அலுவலகத்தை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர். தலைவர்களின் உருவ சிலைகளை எந்திரங்களைக் கொண்டு அகற்றி இழிவுபடுத்தும் விதத்தில் குப்பையில் போட்டுள்ளார்கள்.



இதே பகுதியில் இன்னும் பல கட்சி அலுவலகங்கள், கோவில்கள், நீர் பிடிப்பு பகுதியில் உள்ளன. அவற்றை அகற்ற ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் அலுவலகத்தை முன்னறிவிப்பு இல்லாமல் இடித்து இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.
Tags:    

Similar News