செய்திகள்

மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்திற்கு பெற்றுத்தர கவர்னர் உறுதியளித்துள்ளார் - அமைச்சர் வேலுமணி

Published On 2017-11-15 04:43 GMT   |   Update On 2017-11-15 04:44 GMT
மத்திய அரசின் திட்டங்களை முழுமையாக தமிழகத்திற்கு பெற்றுத்தர கவர்னர் உறுதியளித்துள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேசியுள்ளார்.
கோவை:

சமீபத்தில் தமிழக கவர்னராக பொறுப்பேற்ற பன்வாரிலால் புரோகித் நேற்று கோவையில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து திடீரென ஆய்வு செய்தார். மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆளுநரின் இந்த திடீர் நடவடிக்கை, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆளுநரின் இந்த திடீர் ஆய்வு நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் இதுவரை தலையிட்டது இல்லை என்றும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியிருந்தார். வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆளுநர் ஆலோசனை செய்ய அதிகாரமே இல்லை என்று கூறிவிட முடியாது, அதிகாரத்திற்கு உட்பட்டுதான் நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என்பது கவர்னருக்கு தெரியும் என்றும் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கோவையில் தூய்மை இந்தியா திட்ட நிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார். வணக்கம் என கூறி பேச்சை தொடங்கிய அவர், மத்திய அரசின் திட்டங்களை, மாநில அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

மேலும், அனைத்து மாவட்டங்களிலும் அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யவேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, மத்திய அரசின் திட்டங்களை, தமிழகத்திற்கு முழுமையாக பெற்றுத்தர கவர்னர் உறுதியளித்துள்ளதாக பேசினார்.

கோவையில் காந்திபுரம், பீளமேடு பகுதிகளில் மத்திய - மாநில அரசுகளின் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை கவர்னர் ஆய்வு செய்ததாகவும்,  உப்பிலிபாளையம் - விமானநிலையம் இடையிலான மேம்பாலம் உள்ளிட்ட பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டதாகவும் அமைச்சர் பேசினார்.
Tags:    

Similar News