செய்திகள்

ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு - சென்னைக்கு 6 மாதத்துக்கான குடிதண்ணீர் கிடைத்தது

Published On 2017-11-07 09:25 GMT   |   Update On 2017-11-07 09:25 GMT
வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
சென்னை:

கடந்த மே, ஜூன் மாதங்களில் சுட்டெரித்த அக்னி நட்சத்திர வெயிலுக்கு குடிநீர் தேவை அதிகமாக இருந்ததால், சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் நீர்மட்டம் முற்றிலுமாக குறைந்தது.

ஏரிகளில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே நீர் இருப்பு இருந்தது. இதில் சோழவரம் ஏரி முழுமையாக வறண்டு விட்டது.

இதனால் சென்னையில் குடிநீருக்காக கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து போரூர் ஏரி, கல் குவாரிகள், விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது. ஆனாலும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாததால் மக்கள் அவதி அடைந்தனர்.

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

செம்பரம்பாக்கம் உள்பட 4 ஏரிகளில் 11,057 மில்லியன் கனஅடி நீர் தேக்க முடியும். தற்போது பெய்துள்ள மழையால் 4 ஏரிகளில் 3185 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருக்கிறது. இது மொத்த கொள்ளளவில் 35 சதவீதமாகும்.

கடந்த 10 நாட்களில் மழையால் 4 ஏரிகளுக்கு 2 டி.எம்.சி. தண்ணீர் வந்து இருக்கிறது. சென்னை நகருக்கு நாள் ஒன்றுக்கு 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவை.

மழை இல்லாததால் 78 கோடி லிட்டராக குறைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது வடகிழக்கு பருவ மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 58 கோடி லிட்டராக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து இருப்பதால் சென்னை நகருக்கு அடுத்த 6 மாதங்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்றும், வரும் நாட்களில் மழை தொடர்ந்து பெய்தால் விரைவில் முழுமை அளவு 83 கோடி லிட்டர் தண்ணீர் வழங்க வாய்ப்பு உள்ளதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

குடிநீர் தட்டுப்பாட்டின் போது குடிநீர் வாரியம் சார்பில் தினமும் 7 ஆயிரம் லாரிகளில் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது 4860 லாரிகளாக குறைக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News