செய்திகள்

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகளை உடனே செய்து கொடுக்க வேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2017-11-03 22:00 GMT   |   Update On 2017-11-03 22:00 GMT
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தமிழக அரசு உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் சூரியபிரகாசம் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

கடந்த 2015-ம் ஆண்டு பெய்த கனமழையினால் சென்னை நகரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அதன்பிறகும் அரசு அதிகாரிகள் முறையாக எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது பெய்த மழையால் குடியிருப்பு பகுதிகளில் வசித்து வரும் மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். அதிகாரிகளின் மெத்தனப்போக்கினால் பருவமழை காலங்களில் பொதுமக்கள் பல்வேறு துயரங்களை சந்தித்து வருகின்றனர். எனவே, சென்னை நகர் மற்றும் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை சரி செய்ய கீழ்மட்ட அளவில் பேரிடர் மேலாண்மைக் குழுவை உடனடியாக அமைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.



இந்த மனு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், சென்னையில் மழை, வெள்ள பாதிப்புகளை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார்.

இந்த அறிக்கையை படித்துப் பார்த்த நீதிபதிகள், கட்டுப்பாட்டு அறையில் உள்ள 1913 என்ற ‘ஹெல்ப் லைன்’ எண் செயல்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினர். இதைதொடர்ந்து கோர்ட்டு அறைக்குள் இருந்த அட்வகேட் ஜெனரல் தனது செல்போன் மூலம் ஹெல்ப் லைன் எண்ணை தொடர்பு கொண்டார். அப்போது கட்டுப்பாட்டு அறையில் இருந்த அலுவலர் பேசினார். இதைதொடர்ந்து கட்டுப்பாட்டு மையம் முறையாக செயல்படுவதாக அட்வகேட் ஜெனரல் கூறினார்.

அப்போது தலைமை நீதிபதி, ‘கொல்கத்தாவில் மழைநீரை அகற்ற பாதாள மழைநீர் கால்வாய் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதுபோன்ற திட்டங்களை இங்கு செயல்படுத்தலாமே?. சாந்தோம் சாலையில் தேங்கியிருந்த மழைநீர் அகற்றப்படுவதை நான் காரில் செல்லும்போது பார்த்தேன். இந்த நடவடிக்கை எல்லா இடங்களிலும் தொடர வேண்டும்’ என்றார். பின்னர், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்துவதில் என்ன சிக்கல் உள்ளது? என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், ‘ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை தொடர்ந்து செய்து வருகிறோம். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட சில நாட்களில் ஆக்கிரமிப்பாளர்கள் மீண்டும் ஆக்கிரமித்து விடுகின்றனர். இதை முழுமையாக அகற்றுவது என்பது பெரிய சவாலாக உள்ளது’ என்றார்.

அப்போது மனுதாரர் சூர்யபிரகாசம், ‘மாநகராட்சி அலுவலகம், பல அரசு பள்ளி கட்டிடங்கள், அரசு அலுவலக கட்டிடங்கள் மழைநீரால் சூழப்பட்டு உள்ளது. கோர்ட்டு உத்தரவிட்டால் மட்டுமே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். மற்ற நேரங்களில் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை’ என்றார்.

இதைதொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-



சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் தேங்கி நிற்கும் மழைநீர் முழுமையாக வெளியேற்றப்படவில்லை என்பதை நாங்களும் அறிகிறோம். தேங்கிய மழைநீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகளில் உள்ள கட்டிடங்கள் உள்ளிட்ட அனைத்து ஆக்கிரமிப்புகளையும் 3 மாதத்திற்குள் அகற்ற வேண்டும்.

தற்போது ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்பு குறித்து தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அதிகாரிகள் உடனடியாக செய்து கொடுக்க வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 10-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News