இந்தியா

கேரளாவில் 'நைல் காய்ச்சல்' பரவல்- 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Published On 2024-05-08 04:55 GMT   |   Update On 2024-05-08 04:55 GMT
  • ஜப்பானிய காய்ச்சல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாதிக்கும். ‘நைல் காய்ச்சல்’ பெரியவர்களை தாக்கும்.
  • ‘நைல் காய்ச்சல்’ அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு காய்ச்சல்கள் பரவி வருகின்றன. இதன் காரணமாக அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ஏராளமானோர் சிகிச்சை பெற்றனர். இந்நிலையில் அங்கு 'நைல் காய்ச்சல்' பரவி வருகிறது.

கேரள மாநிலம் திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களை சேர்ந்த சில சிறுவர்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அந்த சிறுவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், அவர்களுக்கு 'நைல் காய்ச்சல்' பாதிப்பு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

'நைல் காய்ச்சல்' எனபது கியூலக்ஸ் கொசுக்களால் பரவும் தொற்று நோய் ஆகும். தலைவலி, காய்ச்சல், தசைவலி, தலை சுற்றல், ஞாபக மறதி உள்ளிட்டவை நைல் காய்ச்சல் பாதிப்பின் அறிகுறிகளாகும். சிலருக்கு காய்ச்சல், தலைவலி, வாந்தி மற்றும் அரிப்பு போன்ற அறிகுறிகளும் இருக்கும்.

இந்த காய்ச்சல் ஜப்பானிய காய்ச்சலை போன்றதாகும். ஆனால் அந்த காய்ச்சலை போன்று ஆபத்தானது இல்லை. ஜப்பானிய காய்ச்சல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாதிக்கும். 'நைல் காய்ச்சல்' பெரியவர்களை தாக்கும். ஆனால் தற்போது கேரளாவில் சிறுவர்களுக்கு 'நைல் காய்ச்சல்' தொற்று ஏற்பட்டிருக்கிறது.

'நைல் காய்ச்சல்' வைரஸ் 1937-ம் ஆண்டு முதன் முதலாக உகாண்டாவில் கண்டறியப்பட்டது. 2011-ம் ஆண்டு கேரள மாநிலம் ஆலப்புழாவில் முதன்முதலாக 'நைல் காய்ச்சல்' பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது அந்த காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுதது மாநில சுகாதாரத்துறை சார்பில் காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் சுகாதாரப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

'நைல் காய்ச்சல்' பாதிப்பு உள்ள திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த மாவட்டங்களில் பருவமழைக்கு முந்தைய துப்புரவு பணிகளை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை மந்திரி வீனா ஜார்ஜ் அறிவுறுத்தி உள்ளார்.

இந்த காய்ச்சல் கொசுக்களால் பரவுகிறது என்பதால் திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டு இருக்கிறது. சுகாதார நடவடிக்கைகளை தவிரப்படுத்த மாவட்ட மருத்துவ அலவலர்களுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

'நைல் காய்ச்சல்' அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்றும், அனைவரும் தங்களின வீட்டின் சுற்றுப்புறத்தை தண்ணீர் தேங்காமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும் மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News