தமிழ்நாடு

நெல்லை காங்கிரஸ் தலைவர் செல்போனிற்கு 2-ந்தேதி இரவு வந்த 2 அழைப்புகள் யாருடையது? போலீசார் விசாரணை

Published On 2024-05-08 04:06 GMT   |   Update On 2024-05-08 04:06 GMT
  • திசையன்விளை சுற்றுவட்டார பகுதி முழுவதும் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
  • ஜெயக்குமார் மாயமான அன்று கையுடன் எடுத்துச்சென்ற 2 செல்போன்களும் மாயமாகி விட்டது.

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கடந்த 2-ந்தேதி மாலையில் மாயமானார். 4-ந்தேதி தோட்டத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

இதற்கு இடைப்பட்ட நேரத்தில் அவர் எங்கெல்லாம் சென்றார்? யாரையெல்லாம் சந்தித்தார்? என்பது குறித்து தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர். இதற்காக திசையன்விளை சுற்றுவட்டார பகுதி முழுவதும் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2-ந்தேதி இரவு 10.20 மணியளவில் அவர் திசையன்விளை பஜாரில் உள்ள ஒரு கடையில் பொருட்கள் வாங்கும் சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து விசாரித்து வரும் நிலையில் இரவு 10.30 மணிக்கு பிறகு அவரது செல்போனுக்கு பெயர் சேமித்து வைக்காத 2 வெவ்வேறு எண்களில் இருந்து போன் வந்துள்ளது. அதில் ஜெயக்குமார் பேசியுள்ளார். அந்த எண்களை போலீசார் ஆய்வு செய்து போன் செய்து பார்த்தனர். அவை சுவிட்ச்-ஆப் என்று வந்துள்ளது.

ஏற்கனவே அவர் மாயமான அன்று கையுடன் எடுத்துச்சென்ற 2 செல்போன்களும் மாயமாகி விட்டது. அதனை இதுவரை போலீசார் கண்டுப்பிடிக்கவில்லை. அந்த செல்போன்கள் கிடைக்கும் பட்சத்தில் அவரது மரண வழக்கில் ஒரு உறுதியான முடிவு கிடைத்துவிடும் என்று போலீசார் நம்புகின்றனர்.

அதேநேரத்தில் அவர் மாயமாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அவரது செல்போனுக்கு வந்த 2 அழைப்புகளையும் போலீசார் ஆய்வு செய்து அவர்கள் யார்? எங்கிருந்து போன் செய்தார்கள்? எதற்காக ஜெயக்குமாரை தொடர்பு கொண்டார்கள்? என்பதை அறிய தீவிரம் காட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News