செய்திகள்

கெங்கவல்லியில் டெங்கு காய்ச்சலுக்கு 7-ம் வகுப்பு மாணவி பலி

Published On 2017-10-27 10:34 GMT   |   Update On 2017-10-27 10:35 GMT
கெங்கவல்லியில் டெங்கு காய்ச்சலுக்கு 7-ம் வகுப்பு மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கெங்கவல்லி:

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சி 2-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் பரமசிவம், டி.வி. மெக்கானிக். இவருடைய மனைவி தேவி. இவர்களது மகன் தனுஷ். மகள் ரத்னபிரியா (வயது 12). இவர்கள் அங்குள்ள தனியார் பள்ளியில் முறையே 10-ம் வகுப்பும், 7-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி முதல் ரத்னபிரியா காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தாள். அவளை பெற்றோர் ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவள் மேல்சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ரத்னபிரியாவுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி ரத்னபிரியா நேற்று பரிதாபமாக உயிரிழந்தாள். அவளது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து பரமசிவம் கூறுகையில், ‘‘எவ்வளவோ கஷ்டப்பட்டும் எனது மகளை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. டெங்கு காய்ச்சலுக்கு பலியான கடைசி உயிராக எனது மகள் இருக்கட்டும். இனி யாரும் உயிரிழக்காமல் இருக்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்‘‘ என்று கண்ணீர் மல்க கூறினார். டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News