செய்திகள்

டெங்கு கொசு உற்பத்தி: ஓய்வுபெற்ற போலீஸ்காரர் வீட்டுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிப்பு

Published On 2017-10-23 16:21 GMT   |   Update On 2017-10-23 16:21 GMT
திருவாரூரில் இன்று காலை கலெக்டர் நடத்திய டெங்கு ஆய்வின்போது ஓய்வு பெற்ற காவலருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தார்.
திருவாரூர்:

தமிழக அரசின் உத்தரவுடி மாவட்டங்கள் தோறும் கலெக்டர் உள்ளிட்ட சுகாதார துறை அலுவலர்கள் டெங்கு தடுப்பு நடவடிக்கை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆய்வின் போது கடைகள், வணிக வளாகங்கள், வீடுகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் சுகாதாரமற்ற சூழல் நிலவினால் அவர்களுக்கு நோட்டீஸ் மற்றும் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இன்று காலை மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ், சுகாதார துறை இணை இயக்குனர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் திருவாரூர் அருகே கமலாபுரம் பகுதி வழியாக டெங்கு தடுப்பு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வழியில் ஓ.என்.ஜி.சி.யில் ஆய்வு நடத்தினார்.

பின்னர் அங்கிருந்து மேப்பாலம் பகுதியில் ஒரு வாட்டர் சர்வீஸ் நிறுவனத்தில் ஆய்வுநடத்தி, தண்ணீர் தேங்காதவாறு சுற்றுப்புறத்தை சுகாதாரமாக பராமரிக்குமாறு கலெக்டர் அறிவுறுத்தினார். பின்னர் வங்காரம்பேரையூர் பகுதிக்கு சென்று வீடுவீடாக ஆய்வு நடத்தினார். அங்கு ஓய்வு பெற்ற போலீஸ்காரர் ஒருவர் வீட்டில் நடத்திய ஆய்வில் தண்ணீர் தேங்கி கொசுப்புழு உற்பத்தியாகி இருப்பதை கண்டு கலெக்டர் அவருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தார்.

இதேபோல் நேற்று மாலை நீடாமங்கலம் பகுதிக்கு சென்ற அவர் பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வு நடத்தினார். அப்போது அங்கு சுகாதாரமற்ற நிலையில் பராமரிப்பின்றி இருப்பது கண்டு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தார். இதுவரை கலெக்டர் நிர்மல்ராஜ் நடத்திய டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News