செய்திகள்

மெர்சல் படத்தை திருட்டுத்தனமாக பார்க்கவில்லை: எச்.ராஜா விளக்கம்

Published On 2017-10-23 04:35 GMT   |   Update On 2017-10-23 04:35 GMT
மெர்சல் படத்தை திருட்டுத்தனமாக பார்க்கவில்லை என பாரதிய ஜனதா தேசிய தலைவர் எச்.ராஜா விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை:

விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தில் ஜி.எஸ்.டி. வரியை விமர்சித்ததற்கு பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கண்டனம் தெரிவித்தார். ‘மெர்சல்’ படத்தை இணைய தளத்தில் பார்த்ததாகவும் அவர் கூறினார்.

இதற்கு தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கண்டனம் தெரிவித்தார். அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு தேசிய கட்சியின் தேசிய செயலாளர் பொறுப்பில் இருப்பவர் பொது வெளியில் நான் இணைய தளத்தில் புதிய படத்தை சட்ட விரோதமாக பார்த்தேன் என்று ஒப்புக் கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. அவர் தனது செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்“ என்றார்.

விஷாலின் கண்டனத்துக்கு எச்.ராஜா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-


எனக்கு வந்த போன் அழைப்புகளில் மத்திய அரசாங்கத்தை பற்றி மெர்சல் படத்தில் தவறாக விமர்சிப்பதாக கூறினார்கள். நெட்மூலம் சம்பந்தப்பட்ட காட்சிகள் எனது செல்போனில் வந்திருந்தது. அதைத் தான் பார்த்தேன் என்று எனது பேட்டியில் கூறினேன். திருட்டுத்தனமாக நெட்டில் படம் பார்த்தேன் என்று நான் சொல்லவில்லை.

ஜி.எஸ்.டி. பற்றி டிஜிட்டல் இந்தியா பற்றி இருக்கிற காட்சிகள் ஏற்கனவே ‘வாட்ஸ்-அப்’பில் வந்துள்ளது. பேஸ்புக்கில் வந்துள்ளது, நெட்டில் வந்துள்ளது. அதை பார்த்தேன், அதை பார்ப்பது எப்படி தவறாகும்.

ஏனென்றால் எனது போனில் வந்திருக்கிறது. நான் யாருக்காவது எனக்கு வந்ததை அனுப்பினால் தார்மீக ரீதியாக இவர் தப்பு பண்ணிவிட்டார் என்று விஷால் வருத்தப்படலாம். ஆனால் நான் யாருக்கும் அனுப்பவில்லையே. எனது போனுக்கு வருவதை நான் ஏன் பார்க்கக்கூடாது.

இவ்வாறு எச்.ராஜா கூறினார்.
Tags:    

Similar News