செய்திகள்

மெர்சல் படத்துக்கு காங்கிரஸ் ஆதரவு: பா.ஜ.க.வுக்கு ப.சிதம்பரம் கண்டனம்

Published On 2017-10-21 06:32 GMT   |   Update On 2017-10-21 06:32 GMT
மெர்சல் படத்தை பா.ஜனதா அரசியலாக்கி இருப்பதால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி மெர்சல் பட கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
சென்னை:

தீபாவளியன்று வெளியான நடிகர் விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் அரசியல் வசனங்களால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவர்களின் செயல்பாடுகளை கடுமையாக விஜய் சாடுகிறார். மத்திய அரசின் பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி, டிஜிட்டல் மயம் ஆகியவற்றின் பாதிப்பும் படத்தில் சுட்டி காட்டப்பட்டுள்ளது.

ஏரி-குளங்கள் வீட்டு மனைகளாக மாறி வருவது, மழை நீரை சேமிக்க தவறுவது, வியாபாரமாகி வரும் கல்வி, இலவசங்கள் என மாநிலத்தின் அவலங்களையும் மெர்சல் படத்தில் எடுத்து கூறியிருக்கிறார்கள்.

மொத்தத்தில் இது விஜய்-யின் அரசியல் படமாக அமைந்திருப்பதாக ரசிகர்கள் கருதுகிறார்கள். மத்திய அரசை குறை கூறியிருப்பதற்காக நடிகர் விஜய்க்கு பா.ஜனதாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. விஜய்யை தாக்கி கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

காலம் காலமாக சினிமாவில் அரசியல், போலீஸ், சட்டசபை என அனைத்தையும் நையாண்டி செய்வது வழக்கமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் சமீப காலமாக சினிமாவில் வரும் பொழுது போக்கு அம்சங்களையும் கருத்து திணிப்பாக கருதி எதிர்ப்புகள் அதிகம் கிளம்பி வருகிறது.

இதனால் ஒவ்வொரு படமும் வெளியாகும் போது பல்வேறு இடையூறுகளை சந்திக்கிறது. அது போல்தான் மெர்சல் படத்துக்கும் அரசியல் ரீதியிலான விமர்சனங்கள் எழுந்துள்ளது.

மெர்சல் படத்தை பா.ஜனதா அரசியலாக்கி இருப்பதால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி மெர்சல் பட கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.


முன்னாள் மத்திய மந்திரியும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் சினிமா பற்றிய கருத்துக்களை வெளியிடுவதில்லை. முதல் முறையாக மெர்சல் படத்துக்கு எதிர்ப்பு கிளம்பி இருப்பது பற்றி கருத்துக்கள் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள கருத்துக்கள் வருமாறு:-

மெர்சல் திரைப்படத்தில் உள்ள வசனங்களை நீக்குமாறு பா.ஜனதா கோருகிறது. ‘பராசக்தி’ படம் தற்போது வெளியாகி இருந்தால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.

இயக்குனர்கள் கவனிக்க.... சட்டம் வரப்போகிறது.... நீங்கள் அரசின் கொள்கைகளை புகழ்ந்து டாக்குமென்ட்ரிகள் தான் எடுக்க முடியும்.

இவ்வாறு ப.சிதம்பரம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு, மெர்சல் படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த படத்தை குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று பார்த்தார். இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

இந்த படம் பார்த்து நான் ‘மெர்சல்’ ஆயிட்டேன். இந்த தீபாவளிக்கு விஜய் கண்களுக்கு விருந்தாக இருக்கிறார். ஒரு நிமிடம் கூட ‘டல்’ ஆக இல்லை.

ஜி.எஸ்.டி., பணமதிப்பு நீக்கம் உள்பட பல பொதுப் பிரச்சனைகளை துணிச்சலாக திரையில் காட்டி இருக்கிறார்கள். இது பெருமைப்பட வைக்கிறது.

மெர்சலால் சிலருக்கு தூக்கம் இல்லா இரவுகள். காட்சிகளை நீக்கச் சொல்வது சுதந்திரத்தை பறிப்பதாகும். இதுக்கே பா.ஜனதா மெர்சல் ஆயிடுச்சே. இது பா.ஜனதாவின் பயத்தை காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மெர்சலுக்கு எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திர சேகர் அளித்த பேட்டி வருமாறு:-

மெர்சல் படத்தை மத்திய சென்சார் போர்டு குழுவினர் பார்த்து அனுமதி வழங்கி இருக்கிறார்கள். அவர்கள் படத்தில் வரும் எல்லா வசனங்களையும் கேட்டு இருக்கிறார்கள். ஆனால் படம் வெளியான பின்பு இப்போது வந்து வசனத்தை நீக்கச் சொல்லக் கூடாது.


இதில் பா.ஜனதாவுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது. நான் விஜய்யின் தந்தையாக பேசவில்லை. ஒரு நடிகராக சொல்கிறேன். சென்சார் போர்டில் உள்ள உறுப்பினர்கள் மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர்கள். அவர்கள் பார்த்து அனுமதித்த பின்பு ஏன் இதை பிரச்சனையாக்க வேண்டும்.

பா.ஜனதாவில் ஒரு பிரிவினரே பணமதிப்பு நீக்கத்துக்கும், ஜி.எஸ்.டிக்கும் எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுக்கிறார்கள். எனவே இதில் விஜய் மீது தாக்குவதில் என்ன நியாயம்?

ஒரு இந்தியன் என்ற முறையில் விஜய் சில பிரச்சனைகளை எழுப்பி இருக்கிறார். ஒவ்வொரு நடிகரும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். அதில் என்ன தவறு இருக்கிறது.

இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News