தமிழ்நாடு

நாளுக்கு நாள் உச்சம் தொடும் வெயிலின் தாக்கம்- கம்மங்கூழ்- ஜூஸ், பழ கடைகள் அதிகரிப்பு

Published On 2024-04-28 05:56 GMT   |   Update On 2024-04-28 05:56 GMT
  • இந்தியா அளவில் வெயிலின் தாக்கம் 2-ம் இடத்தில் இருந்து வருகிறது.
  • சில தினங்களுக்கு வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்துக்கும் மேலாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் புதிய உச்சத்தில் பதிவாகி வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் காலையிலேயே வெயிலின் தாக்கம் ஆரம்பித்து மாலை வரை நீடிக்கிறது. மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக உயர்ந்து சுமார் 108 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் பதிவாகி உச்சத்தை தொட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்திலேயே அதிகபட்சமாக ஈரோட்டில் தான் அதிக வெயில் வாட்டி வருகிறது. இந்தியா அளவில் வெயிலின் தாக்கம் 2-ம் இடத்தில் இருந்து வருகிறது.

இதனால் மாவட்டத்தில் எப்போதும் இல்லாத வகையில் வெயின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. இதனால் ஈரோட்டில் மக்கள் வெளியே செல்ல முடியாத நிலையில் வெயிலின் தாக்கத்தால் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதனால் இன்னும் சில தினங்களுக்கு வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் மக்கள் அச்சம் அடைந்து வருகிறார்கள்.

இதனால் வெயிலின் தாக்கம் காரணமாக மதிய நேரங்களில் முக்கியமான சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.

பெரும்பாலும் மக்கள் மதிய நேரம் வெளியே செல்லும்போது நெருப்பில் நடப்பது போல் இருப்பதால் அவர்கள் வெளியே நடமாடுவதை குறைத்து வருகின்றனர்.

இந்நிலையில் வெயிலின் தாக்கம் காரணமாக மக்கள் நீர்சத்து உள்ள உணவு வகைகளையே பெரும்பாலும் சாப்பிட்டு வருகிறார்கள். மேலும் ஈரோட்டில் பெரும்பாலான இடங்களில் கம்மங்கூழ் மற்றும் ஜூஸ் கடைகள் அதிகளவில் உருவாகி வருகிறது.

ஈரோட்டில் கடந்த 1 மாதத்துக்கு முன்பு ஒரு சில இடங்களில் மட்டுமே கம்மங்கூழ் கடைகள் இருந்தது. ஆனால் மக்கள் பகல் நேரங்களில் அதிகளவில் கம்மங்கூழ் மற்றும் ராகி கூழ் அருந்தி வருகிறார்கள். ஒரு சிலர் வீடுகளில் கூழ் செய்து அருந்தி வருகிறார்கள். ஆனால் பெரும்பாலான மக்கள் கடைகளில் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் கூழ்கள் தேவை அதிகரித்து வருகிறது.

இதனால் ஈரோடு மாநகரில் கூழ் கடைகள் அதிகரித்து வருகிறது. பஸ் நிலையம் பகுதியில் 10-க்கு மேற்பட்ட கடைகள் வியாபாரிகள் அமைத்து உள்ளனர். இந்த கடைகளில் ஏராளமான மக்கள் வந்து கம்மங்கூழ் வாங்கி பருகி வருகிறார்கள்.

இதே போல் ஈரோடு கருங்கல்பாளையம், மூலப்பட்டறை, சத்தி ரோடு, பன்னீர் செல்வம் பார்க் பகுதி, வீரப்பன்சத்திரம், ரெயில் நிலையம் உள்பட மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் கம்மங்கூழ் கடைகள் வழக்கத்தை விட அதிகளவில் வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் ஈரோடு மூலப்பட்டறை அருகே வ.உ.சி. பார்க் பகுதி, சேலம் ரோடு, மேட்டூர் ரோடு ஆகிய இடங்களில் கம்மங்கூழ் கடைகள் அதிகரித்து உள்ளது. அந்த பகுதியில் 1 கடை மட்டுமே இருந்தது. தற்போது அங்கு பல கடைகள் உருவாகி உள்ளது. அங்கு கம்மங்கூழ், ராகி கூழ், மோர் வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கடைகளில் வழக்கத்தை விட வியாபாரம் அதிகரித்து உள்ளது.

மேலும் ஈரோடு மாநகர் பகுதியில் சிறிய சந்துகள் உள்பட எங்கு பார்த்தாலும் கம்மங்கூழ் கடைகள் உள்ளது. இதனால் கம்மங்கூழ் விற்பனையும் அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில் ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில் பழங்கள் விற்பனை கடைகள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேலும் ரோட்டோரங்களில் ஜூஸ் கடைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக சாத்துக்குடி, தர்பூசணி உள்பட நீர் சத்துள்ள பழ வகைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போல் ஈரோட்டில் கரும்பு ஜூஸ் கடைகளும் அதிகளவில் உள்ளது. இந்த கடைகளில் மக்கள் அதிகளவு வந்து கரும்பு ஜூஸ்களை பருகி வருகிறார்கள்.

Tags:    

Similar News