செய்திகள்

அரசு விழாக்களுக்கு மாணவர்களை அழைத்து செல்ல தடை தொடரும்: உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

Published On 2017-09-28 12:31 GMT   |   Update On 2017-09-28 12:31 GMT
எம்.ஜி.ஆர். விழாக்கள் உள்ளிட்ட அரசு விழாக்ளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
சென்னை:

அரசு விழாக்களில், மாணவர்களை அழைத்துச் செல்வதற்கு எதிராக மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனர் நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அரசு விழாக்களில் காலை முதல் மாலை வரை அரசு பள்ளி மாணவ, மாணவியரை கட்டாயப்படுத்தி கலந்து கொள்ளச் செய்துள்ளதாக அந்த மனுவில் கூறியிருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா உள்ளிட்ட அரசு நிகழ்ச்சிகளில் பள்ளி குழந்தைகளை பங்கேற்க செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும் பள்ளி குழந்தைகளை பள்ளி வளாகத்துக்கு வெளியே நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு கூட்டி செல்ல விதிமுறை வகுப்பது தொடர்பாகவும் பதிலளிக்க தமிழக அரசு, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர், காவல்துறை டி.ஜி.பி உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்த தடை உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், மாணவர்களை அழைத்துச் செல்ல விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு விழாக்கள் தொடர்பாக அரசு தாக்கல் செய்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வீடியோவை நீதிபதிகள் பார்த்தனர்.

பின்னர் விரிவான உத்தரவை பிறப்பித்த நீதிபதிகள், மாணவர்களை எம்.ஜி.ஆர். விழா உள்ளிட்ட அரசு விழாக்களுக்கு அழைத்துச் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று கூறினர். அதேசமயம், கலை நிகழ்ச்சிகள் மற்றும் பரிசுகள் பெற செல்வதற்கு மட்டும் மாணவர்களை யாரும் தடுக்கக்கூடாது என்று குறிப்பிட்டனர்.

‘ஒரே இடத்தில் எத்தனை மணி நேரம்தான் மாணவர்கள் உட்கார்ந்துகொண்டிருப்பார்கள்? நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மாணவர்களில் 20 சதவீத மாணவர்கள்தான் நிகழ்ச்சியை கவனித்துக்கொண்டிருப்பார்கள்’ என்று கூறிய நீதிபதிகள், அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
Tags:    

Similar News