செய்திகள்

வத்தலக்குண்டு அருகே ஐம்பொன் சாமி சிலைகளை விற்க முயன்ற வாலிபர் கைது

Published On 2017-09-22 05:07 GMT   |   Update On 2017-09-22 05:07 GMT
வத்தலக்குண்டு அருகே ஐம்பொன் சாமி சிலைகளை விற்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வத்தலக்குண்டு:

திண்டுக்கல் அருகில் உள்ள சித்தையன்கோட்டை சேடப்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மகன் ரஞ்சித் என்ற சூர்யா (வயது28). இவர் கேரளாவில் கூலி வேலை பார்த்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து வந்த ரஞ்சித் அங்கிருந்து புத்தர் மற்றும் கிருஷ்ணர் சிலைகளை கொண்டு வந்தார். அந்த சிலைகளை பட்டிவீரன்பட்டியில் உள்ள சந்தான கிருஷ்ணன் (55) என்பவர் வீட்டில் வைத்திருக்குமாறு கூறினார்.

பின்னர் அந்த சிலைகளை மதுரையை சேர்ந்த ஒரு கும்பலிடம் விற்பனை செய்ய முயன்றார். அவர்களிடம் ரஞ்சித், தன்னிடம் ஐம்பொன்னால் ஆன 2 சிலைகளை விற்பனைக்காக வைத்திருப்பதாக கூறினார்.

சிலைகளை பார்க்க வருமாறு அவர்களிடம் கூறி பட்டிவீரன்பட்டி குறுக்குச்சாலையில் உள்ள கன்னிமார்கோவில் அருகே காத்திருந்தார். அப்போது இவை ஐம்பொன் சிலைகள் இல்லை என்றும் பித்தளையிலான சிலைகள் என்றும் அவர்கள் கூறினர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சிலைகளை வாங்காமல் அவர்கள் சென்று விட்டனர். இது குறித்து வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 2 அடி உயரம் உள்ள கிருஷ்ணர் மற்றும் புத்தர் சிலைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் ரஞ்சித்தையும் கைது செய்து நிலக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே சிலை கடத்தல் தொடர்பாக செம்பட்டி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News