செய்திகள்

தமிழகத்தில் இருந்து சிலைகளை திருடியவர்கள் மீது கடும் நடவடிக்கை: ஐகோர்ட்டு நீதிபதி எச்சரிக்கை

Published On 2017-09-08 02:42 GMT   |   Update On 2017-09-08 02:42 GMT
உலகத்துக்கே ஞானபீடமாக உள்ள தமிழகத்தில் இருந்து சிலைகளை திருடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.மகாதேவன் எச்சரித்தார்.
சென்னை:

தமிழக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் சிலர், புராதன சாமி சிலைகளை, சர்வதேச சிலைக் கடத்தல் கும்பலிடம் விற்பனை செய்துள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் யானை ராஜேந்திரன் ஒரு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி ஆர்.மகாதேவன், விசாரித்து தமிழகம் முழுவதும் நடந்துள்ள சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக ரெயில்வே ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலை நியமித்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இதையடுத்து சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு அதிகாரியாக ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலை நியமிக்க நீதிபதி ஆர்.மகாதேவன், கடந்த 5-ந்தேதி கெடு விதித்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஐகோர்ட்டு மதுரை கிளையில் இருந்தபடி, நீதிபதி ஆர்.மகாதேவன் காணொலி காட்சி மூலம் விசாரித்தார்.

அப்போது, 19 சிலைக் கடத்தல் வழக்குகளை மட்டும் விசாரிக்க ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை அரசு வக்கீல் தாக்கல் செய்தார். அதற்கு நீதிபதி ஆர்.மகாதேவன் கண்டனம் தெரிவித்தார்.

மேலும், “தமிழகத்தில் 531 சிலைக்கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அனைத்து வழக்குகளையும் பொன்.மாணிக்கவேல் விசாரிக்க வேண்டும் என்றுதான் உத்தரவிடப்பட்டது. 19 வழக்குகளை மட்டும் விசாரிக்க அவரை நியமித்திருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது. இந்த வழக்குகளை விசாரிக்க கும்பகோணத்தில் சிறப்பு கோர்ட்டு அமைக்கப்பட்டு விட்டதா?” என்று கேள்வி எழுப்பினார்.

அத்துடன், “ஐகோர்ட்டு பிறப்பிக்கிற உத்தரவை தலைமை செயலாளர், டி.ஜி.பி. என எந்த ஒரு உயர் அதிகாரியாக இருந்தாலும், கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இதுதொடர்பாக வருகிற 11-ந்தேதி தலைமை செயலாளர் உள்ளிட்டோர் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

“உலகத்துக்கே ஞானபீடமாக திகழ்கிற தமிழ்நாட்டு மண்ணில் இருந்து தொன்மையான, புராதன சிலைகளை திருடிச்செல்ல யாரையும் அனுமதிக்க முடியாது. சிலைகளை திருடியவர்கள் யாராக இருந்தாலும், இந்த ஐகோர்ட்டு சும்மாவிடாது. அவர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் எச்சரித்தார்.
Tags:    

Similar News