உள்ளூர் செய்திகள்

வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டூத்தீ மரங்கள், கொடிகள் எரிந்து சேதம்

Published On 2024-04-27 05:08 GMT   |   Update On 2024-04-27 05:08 GMT
  • வெயில் கொளுத்தி வருவதால் வனத்தில் ஆங்காங்கே காட்டுத்தீயும் ஏற்பட்டு வருகிறது.
  • எஸ்டேட் தொழிலாளர்களும் சேர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வால்பாறை:

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இதனால் நீர்நிலைகள் மற்றும் ஆறுகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.

மேலும் வனப்பகுதியில் உள்ள நீருற்றுகளிலும் தண்ணீர் வெகுவாக குறைந்துள்ளது. அத்துடன் வனத்தில் உள்ள மரங்கள் செடி, கொடிகள் காய்ந்து வருகிறது.

இதனால் வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதியை நோக்கி படையெடுத்து வருகின்றன. வெயில் கொளுத்தி வருவதால் வனத்தில் ஆங்காங்கே காட்டுத்தீயும் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வால்பாறை அருகே வாட்டர் பால்ஸ் எஸ்டேட் மற்றும் வேவரலி எஸ்டேட் பகுதிகளுக்கு இடையே உள்ள வனப்பகுதியில் திடீரென பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் எஸ்டேட் தொழிலாளர்களும் சேர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் தீ பற்றி எரிந்து உள்ளதாகவும், வனத்தில் உள்ள மரம், செடி, கொடிகள் தீயில் கருகி சேதம் அடைந்துள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வனப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என்றும், மீறினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News