செய்திகள்

கொடைக்கானலில் வேகமாக பரவும் டெங்கு: சுற்றுலா பயணிகள் - பொதுமக்கள் பீதி

Published On 2017-09-02 13:50 GMT   |   Update On 2017-09-02 13:50 GMT
கொடைக்கானலில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்துள்ளனர்.

கொடைக்கானல்:

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் கொடைக்கானலில் 2 பேருக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பருவ நிலை மாற்றம் காரணமாக பொதுமக்கள் தற்போது மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைக்கு படையெடுத்து வருகின்றனர்.

சீனிவாசபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் (வயது 32), அட்டுவம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் (42) ஆகியோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு இருவருக்கும் டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் டெங்கு அறிகுறி தென்பட்டுள்ளது.

இதனால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பீதியடைந்துள்ளனர். கொடைக்கானலில் ஏழை மக்கள் மற்றும் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், கூக்கால், பூண்டி, கிளாவரை பகுதி மக்கள் போதிய சிகிச்சை இன்றி தவித்து வருகின்றனர்.

வெளியூர்களுக்கு சென்று சிகிச்சை பெறுவதற்கு அவர்களிடம் வசதி இல்லை. எனவே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள கிராம மக்களுக்கு மருத்துவத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு சிகிச்சை அளிக்க வேண்டும். டெங்கு உள்பட அனைத்து பரிசோதனைகளும் அவர்களுக்கு கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

காய்ச்சல் பாதித்தால் பொதுமக்கள் உடனே அரசு ஆஸ்பத்திரியில் அனைத்து சிகிச்சைகளையும் பெறுவதற்கு மருத்துவ துறை முலம் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News