செய்திகள்

ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாமல் புதுவையில் பா.ஜனதா ஆட்சியா?: நாராயணசாமி

Published On 2017-08-12 07:55 GMT   |   Update On 2017-08-12 07:55 GMT
ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாமல் புதுவையில் பாரதிய ஜனதா ஆட்சி என்று கூறுவது வேடிக்கையானது என முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி:

புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

புதுவையில் வருகிற 16-ந்தேதி ஐதராபாத்துக்கு விமான சேவை தொடங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டாக விமான நிலையம் மூடப்பட்டு விமான போக்குவரத்து இல்லாமல் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்திருந்தது. சுற்றுலா பயணிகள் தரைவழியாக வந்தாலும்கூட விமான சேவை ஆரம்பிப்பதன் மூலம் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் வாய்ப்பு ஏற்படும்.

மத்திய விமானத்துறை அமைச்சகத்துடன் ஒப்பந்தம் போட்டு விமான சேவை தொடங்க கேட்டோம். இதன் படி விமான சேவை தொடங்கப்படுகிறது. இதன் மூலம் சுற்றுலா மட்டுமின்றி வியாபாரமும் பெருகும்.

முதல் கட்டமாக புதுவையிலிருந்து ஐதராபாத், விஜயவாடாவுக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் இயக்கப்படும். தொடர்ந்து பெங்களூரு, கொச்சின், திருப்பதி நகரங்களுக்கு விமான சேவை தொடங்க வலியுறுத்தியுள்ளோம்.

ஒடிசா ஏர் என்ற நிறுவனம் புதுவையிலிருந்து சேலம், பெங்களூர் விமான சேவை தொடங்க ஒப்புதல் அளித்துள்ளனர். நம் மாநிலத்தில் சரக்கு கையாள்வதற்காக ஒரு ஒப்பந்தம் போட்டு ஆயத்த பணிகள் நடந்து வருகிறது.

கப்பல்கள் வந்து செல்ல 3 லட்சம் கியூபிக் மீட்டர் மணல் அள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய தூர்வாரும் நிறுவனம் இதில் 95 சதவீத பணிகளை முடிக்க உள்ளது.

இந்நிலையில் சிலர் சுற்றுச்சூழலை காரணம் காட்டி துறைமுக திட்டத்தை முடக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். புதுவையில் வேலைவாய்ப்பு பெருக துறைமுகம், விமான சேவை போன்றவை தேவை. சென்னை, தூத்துக்குடி, விசாகப்பட்டினத்தில் பெரிய துறைமுகம் உள்ளது.

காரைக்காலில் சிறிய துறைமுகம் செயல்படுகிறது. காரைக்கால் துறைமுக நிறுவனம் அரசுக்கு ரூ.3.60 கோடியை அளித்துள்ளனர். இதுபோல சிறிய துறைமுகம் புதுவையில் அமைந்தால் மாநில வளர்ச்சி அதிகரிக்கும்.

மத்திய பா.ஜனதா அரசு 3 நியமன உறுப்பினர்களை நியமித்தது. இதுகுறித்து சபாநாயகர் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் பா.ஜனதாவின் தலைமையில் ஆட்சி மலரும் என சிலர் தெரிவித்துள்ளனர். ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாமல் இப்படி கூறுவது வேடிக்கையானது.

குஜராத்தில் பார்லிமெண்ட் உறுப்பினர் தேர்தலுக்கு படைபலம், பணபலம், அதிகாரத்தை பயன்படுத்தினர். ஆனால் இறுதியில் நியாயம் வென்றது. அகமது பட்டேல் எம்.பி.யாக வெற்றி பெற்று பா.ஜனதாவுக்கு முடிவு கட்டியுள்ளார்.

புதுவையில் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிக்கு 2 வாக்கு கிடைக்கவில்லை. பா.ஜனதா புதுவையில் வேரூன்ற முடியாத கட்சி. அவர்கள் ஆட்சிக்கு வருவதாக கூறுவது விரக்தியின் போக்கை காட்டுகிறது.

பதவிக்கு வர ஜனநாயக முறையில் தேர்தலில் நின்று வெற்றி பெற வேண்டும். சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா 18 பேரை நிறுத்தியது. ஆனால் 18 பேரும் டெபாசிட் இழந்தனர். அந்த கட்சி விரைவில் ஆட்சிக்கு வரும் என்று கூறுவது பகல் கனவு.

மத்திய அரசை நாங்கள் தொடர்ந்து அணுகி பல திட்டங்களை கேட்டு பெற்றுள்ளோம். மத்திய நிதி கமி‌ஷனில் புதுவையை சேர்க்க வலியுறுத்தி மத்திய நிதி மந்திரியை சந்தித்து பேசினேன். இதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.

இதனால் தற்போது கிடைக்கும் 27 சதவீத நிதி 42 சதவீதமாக கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மத்திய அரசிடம் இருந்து ரூ.567 கோடி மட்டுமே திட்டமில்லா செலவுக்கு பெறுகிறோம். மத்திய அரசிடம் இருந்து ஒவ்வொரு ஆண்டும் கிடைக்க வேண்டிய கூடுதல் தொகை கிடைக்கவில்லை.

இதனால் புதுவைக்கு ரூ.ஆயிரத்து 250 கோடி கேட்டுள்ளோம். 7-வது சம்பள கமி‌ஷன் பரிந்துரையை அமல்படுத்தியதால் ஏற்பட்ட கூடுதல் தொகையையும் வழங்கும் படி கேட்டுள்ளோம். அரசு ஊழியர் சம்பளமாக ரூ.2 ஆயிரத்து 500 கோடி ஆண்டுதோறும் செலவு செய்கிறோம்.

கடந்த ஆட்சியில் கொல்லைப்புறம் வழியாக வேலைக்கு ஆட்கள் வைத்ததால் அரசு சார்பு நிறுவனங்களில் கூடுதல் செலவு ஏற்பட்டது.

இதுகுறித்து அரசு ஆலோசித்து நடவடிக்கை எடுத்துள்ளது. ஒட்டு மொத்தமாக மாநில வளர்ச்சிக்காக அதிகாரிகளை அழைத்து திட்டங்களை வேகமாக நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

வருகிற செப்டம்பர் முதல் வாரம் ஒரு தொகுதி என நானும், அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் சென்று மக்கள் குறைகள் கேட்டு அங்கேயே நடவடிக்கை எடுக்க உள்ளோம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
Tags:    

Similar News