உள்ளூர் செய்திகள்

செஞ்சியில் மழை- 10 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்

Published On 2024-05-08 08:52 GMT   |   Update On 2024-05-08 08:54 GMT
  • பலத்த காற்றுடன் மழை பெய்தது.
  • வியாபாரிகளின் நெல் மூட்டைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

செஞ்சி:

கடந்த சில தினங்களாக செஞ்சி பகுதியில் 100 டிகிரிக்கும் மேலாக வெயில் வாட்டி வதைத்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை 6 மணி அளவில் திடீரென கருமையாக மேகம் சூழ்ந்தது.

அதனைத் தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் செஞ்சி-திருவண்ணாமலை சாலை பகுதியில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் சரிந்து விழுந்தன. மேலும் செஞ்சி கூட்ரோடு பகுதியில் நிழலுக்காக போடப்பட்டிருந்த பந்தலும் சரிந்து விழுந்தது. கோடைக்காலம் என்பதால் கழிவுநீர் கால்வாயில் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டிருந்ததால் சாலையில் தண்ணீர் தேங்கியது. செஞ்சி கமிட்டிக்கு இன்று விவசாயிகள் கொண்டு வந்திருந்த சுமார் 5 ஆயிரம் நெல் மூட்டைகள் மற்றும் நேற்று திறந்த வெளியில் வைக்கப்பட்டு இருந்த வியாபாரிகளின் நெல் மூட்டைகள் உட்பட சுமார் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.


ஏற்கனவே வியாபாரிகளின் நெல் முட்டைகள் குடோனில் வைக்கப்பட்டிருப்பதால் விவசாயிகளின் நெல் மூட்டைகள் நனைவதற்கு வாய்ப்பு ஏற்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினார்கள். எனவே வியாபாரிகளின் நெல் மூட்டைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

செஞ்சியை அடுத்த அங்கராயநல்லூர் என்ற கிராமத்தில் இடி விழுந்து ஆறுமுகம் என்பவரது 3 எருமை மாடுகள் பரிதாபமாக இறந்தன. செஞ்சி-விழுப்புரம் சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் எதிரில் இருந்த சிமெண்ட் சீட் போட்ட வீடு காற்றில் விழுந்ததால் உள்ளே சிக்கி கொண்டிருந்த அலமேலு (வயது 80) கஸ்தூரி (வயது 20) ஆகியோரை செஞ்சி தீயணைப்பு வீரர் முருகன் உள்ளிட்ட தீயணைப்பு படையினர் விரைந்து அவர்களை மீட்டனர்.

Tags:    

Similar News