செய்திகள்

அ.தி.மு.க தலைமை கழகத்தில் திடீர் முற்றுகை போராட்டம்: தந்தை பெரியார் தி.க.வினர் 32 பேர் கைது

Published On 2017-07-16 14:44 GMT   |   Update On 2017-07-16 14:44 GMT
பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக அ.தி.மு.க வாக்களிக்க கூடாது என்று தந்தை பெரியார் தி.க.வினர் அதிமுக தலைமை கழகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 32 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை:

ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க அணிகள் பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழக நலனில் மத்திய அரசு அக்கறை செலுத்தாத நிலையில் அ.தி.மு.க எம்.பி., எம்.எல். ஏ.க்கள் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா வேட்பாளருக்கு எதிராக ஓட்டு போட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்காத நிலையில் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக அ.தி.மு.க வாக்களிக்க கூடாது. என்று தந்தை பெரியார் தி.க. வலியுறுத்தியுள்ளது. அ.தி.மு.க.வின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்காக ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் திரண்ட அவர்கள் அ.தி.மு.கவிற்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினர். இது பற்றி தகவல் கிடைத்ததும் ராயப்பேட்டை இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் போலீசாருடன் விரைந்து சென்றார்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தைபெரியார் தி.கவினர் 32 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 3 பேர் பெண்கள். கைதான அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News